அடிமைக்குக் கிடைத்த அதிகாரம்
சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். (ஆதி 39:22)
பிள்ளைகளின் வாழ்க்கையில் சத்துருக்கள் பிழைகளை உண்டாக்கிவிடாதபடியும், பரிசுத்தம் எனும் அவர்களது ஆடையில் அசுத்தம் எனும் இழையினை நெய்துவிடாதபடிக்கும், கண்மணியைப் போல காத்துவரும் பிள்ளைகளின் வாழ்க்கையில் கறைபடிந்துவிடாதபடிக்கும் கவனமுடன் காப்பவர் நம்முடைய தேவன். நம்முடைய வாழ்க்கையிலும், பக்தியைக் காத்துக்கொள்ள தேவன் செயல்படுத்தும் யுக்தியை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். நம்மை நாமே பாதுகாக்க இயலாத படுகுழிகளை சத்துரு பாதையில் வெட்டிவைத்திருக்கும்போதோ, உண்டாக்கிவைத்திருக்கும்போதோ, அதனைக் காணக்கூடாதவர்களாக நாம் அவ்வழியே கடந்துசென்று கால்களைச் சிக்கவைத்துவிடாதபடி, பத்திரமாகப் பயணிக்கும்படியாக நம்முடைய பாதங்களை பாதை மாறச் செய்பவர் நம்முடைய தேவன். இதனைப் புரிந்துகொண்டவர்களாக, சத்தியத்தின் பாதையிலிருந்து சரிந்துவிடாதபடி நாம் பயணித்தால், அடிமையாக இருந்தாலும், அதிகாரம் ஒரு நாள் அழைப்பது உறுதி.
எகிப்தில், போத்திபாரின் வீட்டில் யோசேப்பு இருந்தபோது, கர்த்தரும் அவனோடே கூட இருந்தார் (ஆதி. 39:2,3). கர்த்தர் அவனோடு கூட இருந்தபடியினால், அடிமையாக அவன் விற்கப்பட்டிருந்தபோதிலும், அதிகாரம் அவனைத் தேடி வந்தது. யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான் போத்திபார் (ஆதி 39:4). அதுமாத்திரமல்ல, பார்வோனுக்கு அடுத்ததாகவும் சிங்காசனத்தில் யோசேப்பு உணர்த்தப்பட்டானே (ஆதி. 41:40). தானியேலுடைய வாழ்க்கையிலும் இந்த காரியத்தினை நாம் காண முடியுமே. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின்
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரக் கட்டளையிட்டபோது, அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல். அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள் (தானி 1:1,3,6). அடிமைகளாகவே பாபிலோனுக்குள் அவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தபொதிலும், அதிகாரம் அவர்களைத் தேடி வந்ததே.
ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டிருந்தபோதிலும், ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான் தானியேல் (தானி 1:5,8). எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் (தானி 1:12,13) என்று ராஜபோஜனத்தைத் தள்ளினது மாத்திரமல்ல, அதற்குரிய பலனையும் அவர்களது முகங்கள் பிரதிபலித்ததே. ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது அல்லவா (தானி 1:15). அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான் (தானி 1:20) என்றே வாசிக்கின்றோம். அதுமாத்திரமல்ல அதிகாரமும் அவர்களைத் தேடிவந்ததே. தானியேல் மாத்திரமல்ல, தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான். (தானி 2:49)
மேலும், எஸ்தரின் வாழ்க்கையும் இப்படியே உயர்த்தப்பட்டதை வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே. இந்து தேசமுதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருப்பத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவுக்கு மனைவியாகும்படியாகவும், சூசான் அரமனையில் ராணியாகும்படியாகவும், ஓர் கன்னிப் பெண் தேடப்பட்டபோது (எஸ்தர் 2:2), பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தவன் மொர்தெகாய். அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தரை வளர்த்தான் (எஸ்தர் 2:6,7). அடிமையாக அவள் காணப்பட்டபோதிலும், அதிகாரம் அவளைத் தேடிவந்ததே. நம்முடைய வாழ்க்கையையும் இத்தகைய நிலைக்கு உயர்த்த கர்த்தர் போதுமானவர்; யுத்தம் கர்த்தருடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக