நீதிமானின் திசை
விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. (ஆதி 19:27,28)
தனிமையில் ஆண்டவர் அளிக்கும் செய்தி, தங்களைக் காப்பதற்கு மாத்திரமல்ல, தரணியையே காப்பதற்கு என்பதை அறிந்தோர் சிலரே. ஆண்டவரையும் தூதர்களையும் சந்தித்தபோது, 'தண்ணீர் கொண்டுவருகிறேன், அப்பம் கொண்டுவருகிறேன்' (ஆதி. 18:5) என்று ஆபிரகாம் சொன்னபோதிலும், தன்னுடைய கூடாரத்தில் இராத்தங்கும்படியாக அவர்களைக் கூப்பிடவில்லை. உபசரிப்பு முடித்ததும், 'உங்கள் வழியே போகலாம்' என்று அனுப்பிவிடவே மனதாயிருந்தான். எனினும், அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனபோது, ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான் (ஆதி. 18:22). இரண்டு காரியங்கள் இங்கு நமது அறிவுக்குப் புரியவேண்டியது. ஒன்று, 'நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்' (ஆதி 18:21) என்று சொன்ன ஆண்டவர், அந்த இரண்டு தூதர்களும் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் புறப்பட்டுச் செல்லவில்லை; இரண்டாவது, ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான் (ஆதி 18:16) என்றே வேதத்தில் வாசிக்கின்றோம்; அப்படியென்றால், ஆபிராகாம் 'அவர்களோடே கூடப்போய்' வழியனுப்பும்போது, ஆபிரகாமைச் சந்தித்த இடத்திலேதானே ஆண்டவர் நின்றுகொண்டிருந்திருக்கவேண்டும்.
அழிவு அறிவிக்கப்படும்போது, நம்முடைய உணர்வு எப்படியிருக்கிறது என்பதைக் காண்பதற்காகவே. இன்றும், ஆண்டவர் நமக்கு முன் நின்றுகொண்டிருக்கின்றார். மற்றவர்களுடைய அழிவு நமக்கு அறிவிக்கப்பட்டால், அது அவர்களுக்காக நாம் செயல்படுவதற்கான அழைப்பே. 'துன்மார்க்கர்களுக்கான அழிவு அறிவிக்கப்பட்டுவிட்டபோதிலும், இன்னும் இன்றும் ஒருகூட்ட ஜனம் ஆசீர்வாதங்களுக்காகவே கையேந்திக்கொண்டிருக்கின்றது.' ஆபிரகாம் ஆசீர்வாதத்திற்காக அப்போது ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொள்ளவில்லை; என்றாலும், ஆசீர்வாதமோ ஆபிரகாமைத் தேடிவந்தது. 'ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்' என்றார் (ஆதி. 18:10). நீதிமானை ஆசீர்வாதம் தேடிவரும்; நீதிமானின் பணியோ அழிவிலிருப்போரை விடுதலையாக்கவேண்டியதே. ஆசீர்வாதத்தினை ஆண்டவர் சொன்னபோது,
தூதர்கள் உடனிருந்தார்கள். ஆனால், அழிவின் செய்தியோ தூதர்கள் சென்றபின்னர் தனிமையிலேயே ஆபிரகாமுக்குச் அறிவிக்கப்பட்டது (ஆதி. 18:16,18). லோத்துவை மாத்திரமல்ல, 'பட்டணமுழுவதையும் அழிப்பீரோ' (ஆதி. 18:28) என்பதுதான் ஆபிரகாமின் விண்ணப்பமாயிருந்தது. இதைப்போன்றே, 'ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன்' (யாத் 32:10) என்று ஆசீர்வாதத்தின் வார்த்தைகளை மோசேயினிடத்தில் ஆண்டவர் சொன்னபோதிலும், மோசே அடங்கிவிடவில்லை. உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும் என்று கெஞ்சிப் பிரார்த்தித்தானே (யாத் 32:11,12,13); மேலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் (யாத் 32:32) என்று பதிலாகப் பலியாகிவிடவும் துணிந்தானே. நீதிமான் ஆசீர்வாதங்களினால் அடங்கிவிடமாட்டான்.
அழிவின் செய்தியைக் கேட்ட ஆபிரகாம் அயர்ந்து தூங்கியிருக்க முடியாது. விடிவதற்குள் என்ன நடந்திருக்கும் என்று விரைந்து செல்கிறான். விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான். நீதிமான்களடைய கண்கள்; அழிவின் திசையினையினையும், அழிக்கப்படவிருக்கும் மக்களை நோக்கியுமே பாத்துக்கொண்டிருக்கும். நம்முடைய கண்கள் பார்ப்பது. ஆசீர்வாத்தின் திசையினையா? அல்லது அழிவிலிருக்கும் மக்களின் திசையினையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக