ஆயிரமா? பதினாயிரமா?
ஏசா .... தான் கானான்தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான். (ஆதி 36:6)
பிணைந்தும் இணைந்தும் கர்த்தருக்கென்று பெரிய காரியங்களைச் செய்துவிடாதபடி, மனிதர்களை பிரித்தே வைத்து, இடையில் உண்டாகும் இடைவெளியில் தான் ஆட்சி செய்ய விரும்புபவன் சத்துரு. சத்துருவின் இத்தகைய சூழ்ச்சிக்கு இடங்கொடுத்து, சகோதரர்களையும் எதிராளிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர் (மத். 5:24,25). அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப். 4:31,32) என்பதல்லவோ அப்போஸ்தலர்களது காலத்துச் சூத்திரம். எனினும், இன்றும் சகோதரர்களாக கூடியிருக்கவேண்டியவர்களை, தனித்தியே நிற்கவைத்து, ஒருவரையொருவர் சத்துருக்களாகப் பார்க்கச் செய்து, தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம் (லூக். 11:17) என்ற நிலைக்கு ஊழியர்களையும் ஊழியங்களையும் தள்ளிவிட சத்துரு எத்தனிக்கிறான்.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர 4:9-12) என்ற தேவ ஆலோசனைக்கு விலகி வாழும்படியாக இன்றும் சத்துரு அநேகரைத் தூண்டிவிடுகின்றான்.
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார் (யோசு 23:10) என்றும், உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான் (நியா 15:15) என்றும், அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? (உபா 32:30) என்றும் எழுதப்பட்டுள்ள வசனங்கள், ஒருவர் இருவரானால், ஆயிரம் பதினாயிரமாகும் என்பதை வெளிக்காட்டுகின்றதே.
'முப்புரி நூலாக' இருவருக்கு இடையில் அவர் இணைந்துவிட்டால், கிடைக்கவிருக்கும் இத்தனை பெரிய வெற்றியிலிருந்து சத்துரு நம்மை விலகச் செய்துவிடாதபடி கவனமாயிருப்போம். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத் 18:20) என்று இயேசு கிறிஸ்துவும் வாக்களித்திருக்கின்றாரே. தன்னிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை வைத்துக்கொண்டு, சகோதரர்களின் சகவாசமேயின்றி தனித்தே ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்றைய நாட்களில் ஏராளம். தனக்கு இருக்கும் சூடு போதுமென்ற சுயத்தோடு, ஆவிக்குரிய சுகம் என்ற போர்வைக்குள் தன்னை மாத்திரம் மூடிக்கொண்டு, அடுத்தவரையும் சூடுண்டாக்கவேண்டும் என்ற பொறுப்பில்லாத நிலையில் வாழும் மனிதர்கள் அநேகர். அப்படியே, குழுக்களிலும், கூட்டங்களிலும் பங்குபெறாமல், தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு ஆவிக்குரிய அநாதைகளைப் போல வாழும் மக்களும் அநேகர் உண்டு. உங்களுக்குக் கிடைக்கும் ஆயிரத்தை வைத்துக்கொண்டே அழகுபார்த்துக்கொண்டிருக்கவேண்டாம்; ஆண்டவருக்கு பதினாயிரம் வேண்டுமென்றால், பக்கத்திலிருக்கும் சகோதரர்களோடும் இணைந்து செயலாற்றவேண்டும்.
ஆபிராமும் லோத்துவும் பிரிந்துபோக, ஆஸ்திகள் காரணமாயிருந்தன (ஆதி 13:6). அப்படியே, ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று (ஆதி 36:6,7). சம்பத்துக்களாலும், சம்மாதித்தவைகளாலும் சகோதரத்துவத்திற்கு இடையிலே சுவர்களைக் கட்டியெழுப்பிவிடாதபடி நாம் கவனமாயிருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக