வெள்ளி, 8 அக்டோபர், 2021

உறவே உரம் (ஆதி. 6:8,9)

 

 உறவே உரம்



நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். (ஆதி. 6:8,9)


தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவினை, 'இரட்சிப்பு' என்ற மறுபிறப்பினால் தொடங்கிவைப்பது கிருபையே; என்றபோதிலும், தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவு தொடர்ந்தால் மாத்திரமே, கிருபை நம்முடைய வாழ்க்கையில் தொடருவது சாத்தியம் என்ற சத்தியத்தையும் கூடவே அறிந்துகொள்வது அவசியம். இல்லையென்றால், தகப்பனிடத்தில் பிறந்திருந்தாலும், காணாமற்போன இளைய குமாரனைப் போலவே நம்iமுடைய வாழ்க்கையும் கானகத்தில் காணப்படும். மாம்சத்தின்படி இளையகுமாரன் தகப்பனிடத்திலேயே பிறந்திருந்தான்; தகப்பனுடைய ஆஸ்திகளுக்கு பங்காளனாகவும் காணப்பட்டான். தகப்பனோடுகூட வீட்டிலே தங்கியிருந்தவரை, தகப்பனுடைய அன்பையும், அரவணைப்பினையும், பாதுகாப்பினையும், பராமரிப்பினையும் பெற்றுக்கொண்டிருந்தான்; என்றபோதிலும், தகப்பனை விட்டுப் பிரிந்து, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணிக்கொண்டிருந்தபோது, அவனுடைய ஆஸ்தி அழிந்துபோனது மாத்திரமல்ல, தகப்பனுக்கும் அவனுக்கும் இடையிலான உறவும், அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும், பராமரிப்பும்கூட அழிந்த நிலையிலேயே காணப்பட்டது (லூக். 15:11-13). பிள்ளையாகப் பிறந்திருந்தபோதிலும், தகப்பனுடைய வீட்டை விட்டு வெளியேறினதினால் வந்த விளைவு இது. எனினும், வீட்டை நோக்கி திரும்பி வந்ததால், மீண்டும் தகப்பனுடைய உறவினைப் பெற்றுக்கொண்டான் இளையகுமாரன். அழிவின் விழிம்பிலிருந்த அவனது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. 

இன்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலையில் காணப்படும் மக்கள் அநேகர். இரட்சிக்கப்பட்டவர்கள், அப்பா பிதாவே என்று அழைத்தவர்கள், தகப்பனுடைய ஆஸ்திகள் அனைத்துக்கும் சொந்தமானவர்கள், தகப்பனுடைய அன்பினையும், அரவணைப்பினையும் அனுதினம் பெற்றனுபவித்தவர்கள்; என்றபோதிலும், இன்றோ தூரதேசத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 'ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு' என்று சொல்லப்படும் அளவிற்கு, தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கை. 

 நோவாவின் வாழ்க்கையில், பெற்றுக்கொண்ட கிருபை தொடர்ந்துகொண்டேயிருந்ததற்குக் காரணம், அவன் தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ததே. மேலும், அவன் தேவனோடு தொடர்ந்து சஞ்சரித்துக்கொண்டிருந்ததற்கு அஸ்திபாரமாயிருந்த குணங்கள், அவன் நீதிமானும், உத்தமனுமாயிருந்ததே. நம்முடைய வாழ்க்கையின் நீதியும், உத்தமமும் தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவினைக் காத்துக்கொள்ளும் உறுதியுள்ளவைகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். முழு உலகமே அழிவினை எதிர்நோக்கிக்கொண்டிருந்த வேளையில், தேவனோடுகூட சஞ்சரித்துகொண்டிருந்த நோவாவின் வாழ்க்கையோ கிருபையினால் காப்பாற்றப்பட்டது.

அவ்வாறே, சோதோம் பட்டணம் முழுவதும் அழிவினை எதிர்நோக்கிக்கொண்டிருந்த வேளையில், கர்த்தருடைய கண்களில் கிருபையைப் பெற்றிருந்த லோத்து காப்பாற்றப்பட்டான் (ஆதி. 19:19). லோத்துவின் வாழ்க்கையில், பெற்றுக்கொண்டிருந்த கிருபை தொடர்ந்துகொண்டேயிருந்ததற்குக் காரணம், அவன் நீதிமானாயிருந்ததே. எனவே பேதுரு தனது நிருபத்தில், நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க (2பேது 2:8) என்று எழுதுகின்றார். 

சிறைச்சாலலையில் இருந்தாலும், சிங்காசனத்தில் இருந்தாலும், தேவனுக்கும் தனக்கும் இடையிலான உறவினை இழக்கவோ ஆயத்தமில்லாதவன் யோசேப்பு. எனவே, கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார் (ஆதி 39:21). மேலும், மோசே தனது வாழ்க்கையில் கிருபையினை அனுபவித்ததற்கும், என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன் (எண்; 12:7) என்பதல்லவோ காரணம். உத்தமமும், நீதியும் வாழ்க்கையின் உரமானால், தேவனோடு சஞ்சரிப்பது எளிதாகும், கிருபையும் வாழ்க்கையில் வெளியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக