புதன், 13 அக்டோபர், 2021

விளக்கும், வெளிச்சமும் (ஆதி 30:27)

விளக்கும், வெளிச்சமும்



அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். (ஆதி 30:27) 


ஆசீர்வாதங்கள் வாழ்க்கையில் பெருகிக்கொண்டேயிருப்பதினால், ஆத்துமா அவருடையதாகிவிட்டது என்று நாம் எடைபோட்டுவிடமுடியாது. ஆசீர்வாதத்தை மட்டும் பெற்றுகொண்டு, ஆத்துமாவிலோ ஆண்டவருக்கு அந்நியர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். ரெபெக்காளின் சகோதரனும், யாக்கோபின் மாமனுமாகிய லாபான், விக்கிரகங்களை தெய்வமாக வணங்கிக்கொண்டிருந்தவன். எனினும், தேவனை அறிந்திருந்த யாக்கோபின் நிமித்தமாகவே தன்னுடைய வீடு தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட்டுவதை லாபான் அறிந்திருந்தான். எனவே, லாபான் யாக்கோபை நோக்கி: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன் (ஆதி. 30:27) என்று கூறுகின்றான். அப்படியே யாக்கோபும், 'நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது (ஆதி 30:30) என்று சொல்லிக்காட்டுகின்றான். மேலும், 'என் தேசத்திற்குப் போக என்னை அனுப்பிவிடும்' என்று யாக்கோபு சொன்னபோது, யாக்கோபின் நிமித்தம் தன் வீடு ஆசீர்வதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்திருந்ததினால், யாக்கோபை தன் வீட்டை விட்டு அனுப்பிவிட மனதில்லாதவனாயிருந்தான் லாபான். யாக்கோபு தன்னுடைய வீட்டை விட்டுச் சென்றுவிட்டால், கர்த்தருடைய ஆசீர்வாதமும் நின்றுவிடுமே என்பதை அறிந்த லாபான், யாக்கோபை நோக்கி: 'உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்' (ஆதி 30:28) என்று சொல்லுகின்றான். 

லாபானுடைய வாழ்க்கை விக்கிரகங்களுடனேயே ஒட்டிக்கொண்டிருந்தது, என்றபோதிலும், யாக்கோபின் நிமித்தம் வரும் ஆசீர்வாதங்களையோ விடாமல் வாங்கிக்கொண்டேயிருந்தான். இத்தனை ஆசீர்வாதங்களை யாக்கோபின் நிமித்தம் கர்த்தரிடத்திலிருந்து பெற்றனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும், கர்த்தராலேயே ஆசீர்வாதம் தன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருந்தபோதிலும்; கர்த்தரையோ லாபான் அறிந்துகொள்ளவில்லை. யாக்கோபை விட்டாலும், தெய்வங்களையோ விட்டுவிட லாபான் ஆயத்தமாயில்லையே. தன் வீட்டை விட்டு யாக்கோபு புறப்பட்டுச் செல்லும்போது, 'இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் (ஆதி 31:30) என்று தான் வணங்கின தெய்வங்களைத் தேடினவனாக யாக்கோபைப் பின்தொடர்ந்து வந்தானே. 

இன்றும் இப்படிப்பட்ட நிலையில் காணப்படும் மக்கள் உண்டு. லாபானைப் போல வாழ்ந்துகொண்டு, ஆசீர்வாதத்தை மட்டும் ஆண்டவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் அநேகர். உலகப்பிரகாரமாகவும், தேவனுக்கு விரோதமாகவும் வாழ்ந்துகொண்டு, தேவ ஊழியர்கள் தங்கள் வீட்டின் உள்ளே நுழைவதினால், நுழையும் சில ஆசீர்வாதங்களை மட்டும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். இத்தகையோர், தங்கள் வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளாமல், தேவைகளுக்காகவே தேவனைத் தேடுபவர்கள்; 'என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய்?' என்று லாபான் கேட்டதைப் போல, ஊழியர்கள் வீட்டை விட்டுச் சென்றபின், விக்கிரகங்களை நோக்கியே இத்தகையோரின் வாழ்க்கை மீண்டும் திரும்பிவிடும். ஆசீர்வாதங்களுக்காக மட்டும் ஆண்டவரைத் தேடிவருவோரின் நிலை ஆபத்தானதே. 

உன் சம்பளம் இன்னதென்று சொல்' என்று லாபான் சொன்னதைப் போல, தாங்கள் மனந்திரும்பாமல், 'காணிக்கையை மட்டும் கொடுத்து கொடுத்து' ஊழியர்களை தங்கள் வசத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பும் மக்கள் உண்டு. தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள் (யோபு 41:11) என்றும், தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? (ரோம 11:35) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. காணிக்கைகளைக் கொடுப்பதினால் ஆசீர்வாதங்களை நாம் ஆண்டவரிடமிருந்து எடுத்துவிடமுடியாது. உள்ளத்தைக் கொடுப்பதினாலேயே அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நாம் பெற்று அனுபவிக்கமுடியும். (ரோம 8:32)

தங்களுடைய வாழ்க்கையின் பரிசுத்தத்தைக் குறித்து எள்ளளவும் உள்ளத்தில் கவலைகொள்ளாமல், பரிசுத்தவான்கள் எவருடைய சிபாரிசிலாவது தங்களுடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும் ஆசீர்வாதங்கள் வந்துவிடாதா! என்ற வாஞ்சையுடன் ஊழியர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் மக்களும், ஓடி ஓடி அவர்களை உபசரித்துக்கொண்டிருக்கும் மக்களும் உண்டு. வீட்டின் உள்ளே ஊழியர்கள் தங்கியிருக்கும்போது, தங்களுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை ஒருவேளை இவர்கள் அனுபவித்தாலும், வீட்டை விட்டு ஊழியர்கள் வெளியேறும்போதோ மீண்டும் வெறுமையான நிலையிலேயே இவர்களது வாழ்க்கை காணப்படும். அதுமாத்திரமல்ல, ஊழியர்கள் வந்தபோது, வெளியேறின இருள், ஊழியர்கள் வெளியேறும்போது வெறியோடு மீண்டும் அவர்களது வீட்டை ஆக்கிரமிக்கக்கூடும். 

அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் (மத் 12:43-45) என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே. 'விரட்டப்பட்ட அசுத்த ஆவி மீண்டும் வீட்டிற்கு வந்ததற்கு வெளிச்சமில்லாததுதானே காரணம்.' இன்றும் ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, அநேகருடைய வாழ்க்கை பெருக்கி, ஜோடிக்கப்பட்டிருந்தபோதிலும், வீட்டிற்கு வரும்போது மீண்டும் விட்டுவந்தவைகளைத் தொட்டுவிடுவதினால் இன்னும் இருளாகவே இருக்கிறது. இத்தகையோரின் வாழ்க்கையை எதிர்பாராத விதத்தில் எந்நேரத்திலும் சத்துரு ஆக்கிரமித்துவிடக்கூடும். 

உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவா 1:9) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத் 5:14) என்று இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டோரைக் குறித்தும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இருளான ஒரு வீட்டில் விளக்கு இருக்கும்போது, ஒருவேளை அது வெளிச்சமாகக் காணப்படலாம்; ஆனால், விளக்கு அங்கிருந்து விலகும்போது மீண்டும் அந்த வீடு இருளடைந்துவிடுமே. இதைப்போலவே, ஊழியர்கள் இருக்கும்போது ஒருவேளை வீட்டிலே சமாதானம் இருப்பதைப்போலவும், கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் அன்பாக இருப்பதைப் போலவும் காட்சியளிக்கலாம்; ஆனால், உள்ளத்தை ஆண்டவருக்குக் கொடுக்காவிடில், ஊழியர்கள் கதவை விட்டு வெளியேறியதும், இருள் மீண்டும் அவர்களைக் கவ்விக்கொள்ளும். விளக்கு இருக்கும்போதே தங்களையும் விளக்காக்கிக்கொண்டால், வீட்டை தொடர்ந்து வெளிச்சமாக்கிக்கொள்ளலாம், சமாதானத்தையும் வீட்டில் தக்கவைத்துக்கொள்ளலாம். 

யோவானைக் குறித்து, அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள் (யோவா 5:35) என்று வாசிக்கின்றோமே. யோவான் உயிரோடு இருக்கும்வரை ஒருவேளை யோவானுடைய வெளிச்சத்தில் அவர்கள் நடந்திருக்கக்கூடும்; ஆனால், யோவானின் மரணத்திற்குப் பின், தங்களை அவர்கள் விளக்காக மாற்றியிருந்தால் மாத்திரமே தொடர்ந்து பயணிப்பது என்பது சாத்தியம். மற்றவர்களுடைய வெளிச்சத்தில் பயணித்துக்கொண்டிருப்பவர்களின் பயணத்தை, அவர்களது மரணத்திற்குப் பின் சத்துரு மறித்துவிடக்கூடும்; தங்களையே விளக்காக மாற்றிக்கொண்டால், அதன் ஒளியிலே தொடர்ந்து சரியான வழியிலே நடக்கலாம்; பிறருக்கும் ஒளிதரலாம். 

இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களை நோக்கி, ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும் (லூக் 10:5,6) என்று சொன்னாரே. இப்படியே, அநேகர் 'சமாதானத்தைத் தங்கவைத்துவிட்டு, திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.' ஆனால், இயேசு கிறிஸ்துவோ, 'சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக' (யோவா 14:27) என்றல்லவோ சொன்னார். அவர் வைத்துப்போன சமாதானத்தை, தக்கவைத்துக்கொள்ள தகுதியில்லாததினாலேயே, அநேகருடைய வாழ்க்கை இன்றும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக