சம்பளத்தில் சரிந்தவன்
அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம் வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். (ஆதி 29:14,15)
மாம்சத்துக்கடுத்தவைகளில் நமது மனதும் கண்களும் மயங்கிப்போனால், தரிசனத்துக்கடுத்தவைகளை மறந்து, சரீரத்துக்கடுத்தவைகளை நோக்கியே நமது வாழ்வின் பார்வை பயணித்துக்கொண்டிருக்கும். அத்துடன், தேவனுடைய இராஜ்யத்திற்கு லாபமானவைகளை விட்டுவிட்டு, உலக வாழ்க்கைக்கு லாபமானவைகளையே உள்ளம் நினைத்துக்கொண்டிருக்கும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:12) என்ற வருங்கால பரலோக பொக்கிஷத்தை மறந்து, நிகழ்காலத்தை வேறெங்கோ நாம் சிறைப்படுத்திவிடக்கூடாது.
மாமனாகிய லாபானுடைய வீட்டில் முதல் ஒரு மாதம் வரை யாக்கோபு தங்கியிருந்தபோது, சுகமாயிருந்திருக்கக்கூடும் என்றாலும் அவன் சும்மாயிருந்துவிடவில்லை; லாபானின் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டுதானிருந்தான். வீட்டை விட்டு வெளியே வந்தபோது, ஒன்றுமில்லாதவனாகவே யாக்கோபு புறப்பட்டு வந்தான். எனவே, 'அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் (ஆதி 32:10) என்று கூறுகிறான் யாக்கோபு. வெறுங்கையனாகக் கடந்தவந்த யாக்கோபு, உணவும் மற்றும் உறைவிடமும் கிடைத்தாலே போதும் என்ற உணர்வோடுகூட ஒருவேளை லாபானுடைய வீட்டில் இருந்திருக்கக்கூடும். எனினும், அதற்கும் ஒருபடி மேலாக, லாபான் தனது மகளான ராகேலை தனக்கு மணமுடித்துக்கொடுத்தால் நன்றாயிருக்குமே என அவனது மனது அடித்துக்கொண்டிருந்தது.
மருமகனாயிருந்தாலும், வேலைக்கேற்ற கூலியைக் கொடுக்கவேண்டும் என்ற மனமுடைய லாபான், யாக்கோபை நோக்கி, 'சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்?' என்று கேட்டபோது, யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான் (ஆதி 29:18). தீர்க்கதரிசியாகிய ஓசியா, யாக்கோபைக் குறித்து எழுதும்போது, 'யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒருபெண்ணுக்காக ஆடு மேய்த்தான்' (ஓசி 12:12) என்றே சற்று கடினமாகவே எழுதுகின்றான். சம்பளத்தைக் கேட்ட மாமனிடத்தில் சம்பந்தம் பேசுகிறான் யாக்கோபு; என்றாலும், தன் சரீரம் ஏழுவருடம் அதற்காக அடிமையாகப்போவதையோ அவன் அறியாதிருந்தான். சம்பளம் என்ற பெயரில் சரீரத்தை விட்டுக்கொடுத்தவர்களாக நாம் வாழ்ந்துவிடக்கூடாது.
கர்த்தர் யாக்கோபை நோக்கி, நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் (ஆதி 28:13) என்று சொன்னார். என்றாலும், தரிசன பூமியின் மீது இருக்கவேண்டிய ஆசை, ராகேலின் மீது திரும்பிவிட்டது. 'சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்?' என்ற மாமனாகிய லாபானின் கேள்வியை, இதுதான் சரியான சமயம் என்று எண்ணி, தனது வாழ்க்கைக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான் யாக்கோபு. மருமகனாயிருந்தாலும், அவனது மனம் எங்கே வீழ்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்ட லாபான், தனது மகளை (மகள்களைக்) கடத்துவதற்கு இதுதான் சரியான சமயம் என்று உள்ளத்தில் எண்ணியவனாக, உடனே அதற்குச் சம்மதித்தான். ஏழு வருடங்களுக்குப் பின்னரே, லாபான் தன்னை ஏமாற்ற நினைத்திருந்தது யாக்கோபுக்குத் தெரியவந்தது.
இன்றும், என்ன வேண்டும்? என்று நம்மிடத்தில் கேட்கப்படும் கேள்விக்கு, மாம்சத்திற்கடுத்த விருப்பங்களையே விடைகளாக்கிச் சொல்லிக்கொண்டிருக்கின்றோமா? உலகத்திற்கடுத்த ஆசீர்வாதங்கள் உன்னதத்திலிருந்து வந்தாலும், பரலோக இராஜ்யத்திற்காக அவை செலவழிக்கப்படாவிடில், பரலோகம் அவைகளால் பயனடையாது. யாக்கோபினிடத்தில் கேட்கப்பட்டதைப் போன்ற கேள்வி நம்மிடத்தில் கேட்கப்பட்டால், கண்ணுக்கு விருப்பமானகைளா? அல்லது விண்ணுக்கு விருப்பமானவைகளா? பரலோகத்தில் பொக்கிஷத்தையே சம்பளமாகக் கேட்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக