சந்திப்பு
என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும். (ஆதி 24:12)
கைகளிலிருப்பதைச் சார்ந்து அல்ல கர்த்தரையே சார்ந்து நின்றால் அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். ஆபிரகாமின் ஊழிக்காரன் ஊருக்கு புறம்பே தண்ணீர் துரவண்டைக்கு வந்து சேர்ந்ததும், 'நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்' (ஆதி 24:14) என்று ஆண்டவரை நோக்கியே ஜெபிக்கின்றான். உச்சிதமான பொருட்களோடு நாகோரின் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாலும், உன்னதமான தேவனையே நோக்கி அவன் காத்திருந்தான். தன்னுடைய அனுபவத்தையோ, ஞானத்தையோ கொண்டு பெண்ணை தெரிந்தெடுத்துவிட அவன் முயற்சிக்கவில்லை; மாறாக, தேவனோடு சொல்லிய வார்த்தைகள் நிறைவேறும்படியாகக் காத்திருந்தான். இன்றோ, உச்சிதமானவைகளை எதிர்பார்த்து, உன்னதமானவரால் ஆயத்தம்பண்ணப்பட்ட துணையை விட்டுவிட்டவர்கள் உண்டே.
'இன்றைக்கு' என்று ஜெபித்ததுபோலவே, அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள் (ஆதி 24:15). ஆபிரகாமின் ஊழியக்காரன் துரவண்டைக்கு வரும்போது, ரெபேக்காளையும் ஆண்டவர் சரியான நேரத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தாரே. ஆபிரகாமின் ஊழிக்காரன் வந்ததும், முதல் முதல் அந்த துரவண்டைக்கு வந்தவள் ரெபேக்காளே; அதற்கு முன் எந்த பெண்ணையும் ஆபிரகாமின் ஊழியக்காரன் சந்தித்துப் பேசவில்லை. நம்முடைய ஆண்டவர் ஒருபுறத்தை மாத்திரமல்ல, இருபுறத்தையும் ஆயத்தப்படுத்துகின்றவர். ஒளித்துக்கொண்டிரு (1இரா. 17:3) என்று எலியாவுக்குக் சொன்னவர், போஷிக்கும்படியாக காகத்தையும், சாறிபாத் ஊருக்குப் போ என்று சொன்னவர் (1இரா. 17:9), அங்கே அவனைப் பராமரிக்கும்படியாக விதவையையும் ஆயத்தமாக வைத்திருந்தாரே.
ரெபேக்காள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான் (ஆதி 24:17). ஆண்டவரிடத்தில் ஜெபித்ததோடு மாத்திரமல்ல, தண்ணீர் துரவண்டையிலே நின்றபோதிலும், தேவன் தெரிந்தெடுக்கும் பெண் தண்ணீர் தரும்படியாக ஆபிரகாமின் ஊழியக்காரன் காத்திருந்தான். ஆபிரகாமின் ஊழிக்காரன் தாகமாகவே இருந்துவிடக்கூடாது என்பதற்காக உடனே ஆண்டவர் ரெபேக்காளை அங்கே அழைத்துவந்துவிட்டாரோ! ஊழிக்காரன் கேட்டதும், வீட்டுக்கு கொண்டுசெல்லவிருந்த குடத்தை உடனே ஊற்றிவிட்டாள் ரெபேக்காள். ஆபிரகாமின் ஊழியக்காரன் பத்து ஓட்டகங்களுடன் சென்றிருந்தான் (ஆதி. 24:10); பத்து ஒட்டகங்களுக்கும் ரெபேக்காள் தண்ணீர் மொண்டு வார்த்தாள். எத்தனை முறை துரவிற்குள் இறங்கி ஏறியிருப்பாள். தண்ணீர் கொடுத்தது மாத்திரமல்லாமல், இராத்தங்க இடம் கேட்டபோதும், இடமும், வைக்கோலும், தீவனமும் கொடுக்க ஆயத்தமாயிருந்தாள். உச்சிதமானதையே அவர் ஆயத்தம்பண்ணுகிறவர்.
குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ (ஆதி. 24:14) என்பதுதான் ஆபிரகாமின் ஊழியக்காரனின் ஜெபம். ஆனால், ரெபேக்காளோ, குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொன்னாள் (ஆதி 24:18,19). ஆபிரகாமின் ஊழிக்காரனது வார்த்தைகள் அவனது தாழ்மையினையே வெளிப்படுத்துகின்றன. ரெபேக்காள் வீட்டிற்குச் சென்றுவிட்டபின்னும், ஆபிரகாமின் ஊழியக்காரன் துரவண்டையிலேயே நின்றுகொண்டிருந்தான் (ஆதி. 24:30). தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (லூக் 14:11) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனையின் பலன் ஆபிரகாமின் ஊழிக்காரனது வாழ்க்கையில் அன்றே வெளிப்பட்டதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக