வேதனையான துணை
ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். (ஆதி 26:34,35)
நம்முடைய வாழ்க்கை, பிறருக்கு வேதனையை வருவித்துவிடக் காரணமாக அமைந்துவிடக்கூடாது. பிரித்தெடுக்கப்பட்டதை மறந்து, பிரிந்துபோனவைகளோடு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தால், எல்லைக்குள் உண்டாகும் தொல்லைக்கு நாம் வேலியடைக்கமுடியாது. ஏசா, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதித்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியதோடு (ஆதி. 26:34,35), கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும், இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான் (ஆதி 36:2,3). தனக்கான துணையை தானாகவே தேடிக்கொண்டான் ஏசா. ஏசாவின் தனிச்சையான இச்செயல், குடும்பத்தில் வேதனையையே வருவித்தது. குடும்ப வாழ்க்கையில் மாத்திரமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஊழியத்திற்கடுத்த காரியங்களிலும் தனிச்சையாகச் செயல்படும் நபர்கள் பிறருக்கு வேதனையளிப்பவர்களாகவே காணப்படுவார்கள்.
மகனாகிய ஈசாக்கிற்கு மணவாட்டியைத் தேடும்படியாக ஆபிரகாம் தன் வேலைக்காரனை அனுப்பியபோது, நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான் (ஆதி 24:3,4). ஆபிரகாம் ஈசாக்கிற்குச் செய்ததைப் போல, ஈசாக்கு தன் குமாரர்களுக்காகச் செய்யாதது, அவர்களே தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்ளும்படியான நிலையை அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஏசாவும் அப்படியே யாக்கோபும் தங்களுக்கான துணையை தாங்களேதானே தேடிக்கொண்டார்கள். ஏசாவின் மனைவிகள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
அப்படியே, யாக்கோபின் மனைவியாகிய ராகேல் தன் தகப்பனுடைய தெய்வங்களைத் திருடிக்கொண்டுவந்து, யாக்கோபுடைய மனதையும், தேவனுடைய மனதையும் நோகச்செய்துவிட்டாளே. யாக்கோபு தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டபோது, ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள் (ஆதி 31:17-19). ஆனால், 'என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய்?' (ஆதி. 31:30) என்ற கேள்வியோ யாக்கோபினிடத்தில் அல்லவோ கேட்கப்பட்டது. யாக்கோபை நோக்கி லாபான் கேட்ட இக்கேள்வி, யாக்கோபின் மனதை எத்தனையாய் வேதனைக்குள்ளாக்கியிருக்கும். யாக்கோபு ராகேலை நேசித்தான், ராகேலோ சுரூபத்தை நேசித்துக்கொண்டிருந்தாள். யாக்கோபுக்கு மனைவி ராகேல்; ஆனால், ராகேலின் மணவாளனோ சுரூபம், எத்தனை வேதனையான நிகழ்வு.
யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான் (ஆதி 35:2-4); ஆனால், தகப்பனிடத்திலேயே கொடுக்காத ராகேல் தன்னுடைய சுரூபத்தை கணவனிடத்தில் கொடுத்திருப்பாளோ என்பது கேள்விக்குரியே. ராகேல் மரித்தபின்பு ஒருவேளை லாபானின் சுரூபங்களை யாக்கோபு தன் வீட்டிலில் கண்டுபிடித்திருக்கக்கூடுமே. ராகேல் வழியிலேயே அடக்கம்பண்ணப்பட்டதற்கு, அவளுக்கு உண்டான வலியல்ல (ஆதி. 35:17), அவள் உண்டாக்கின வலியே (ஆதி. 31:34) காரமாயிருந்திருக்கும். பலிபீடத்தைக் கட்ட அழைக்கப்பட்ட கணவனோடு பயணித்தவள் (ஆதி. 35:1) பாதையில் பலியாகிவிட்டாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக