உத்திரமா? துரும்பா?
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். (ஆதி. 38:24)
தனக்கென ஒரு சட்டம், பிறர்க்கென ஒரு சட்டம் என்று செயல்படும் மக்கள், தன்னுடைய பெலவீனத்தைப் புதைத்துக்கொண்டு, பிறருடைய பெலவீனங்களையோ ஊரெங்கும் பறைசாற்றிக்கொண்டும், பிரதிபலித்துக்கொண்டும் இருப்பார்கள். 'உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதொன்ன?' என்றும், 'உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்களிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வது எப்படி?' என்றும் இயேசு கிறிஸ்து சொல்லுகின்றாரே. 'பார்க்கிறதென்ன?' என்று மாத்திரம் கேட்பதோடு நிறுத்திவிடாமல், 'எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வது எப்படி?' என்றும் இயேசு கிறிஸ்து கேட்கின்றாரே. அது மாத்திரமல்ல, 'மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்' (மத் 7:3-5) என்றும் எச்சரிக்கின்றாரே. யூதாவின் நிலையும் இப்படிப்பட்டதாகவே காணப்பட்டது; தன்னிடத்தில் குற்றத்தை வைத்துக்கொண்டு, தாமாரையோ முற்றிலுமாக அழித்துவிட நினைத்தான்.
அநேக, நேரங்களில் நம்முடைய வாழ்க்கையும் இத்தகைய ஓப்பீட்டு நிலையிலேயே காணப்படுகின்றது. நம்முடைய கண்களில் உத்திரத்தை வைத்துக்கொண்டே, பிறருக்கு பிரசங்கம் பண்ணிவிடுகின்றோம், பிறருடைய வாழ்க்கையிலிருக்கும் துரும்பைக் கூட தூக்கிப்போடுவது எப்படி என்று அவர்களுக்கு ஆலோசனையும் கூறிவிடுகின்றோம். பிறருடைய கண்களிலிருக்கும் துரும்பைப் பார்க்கும் அளவிற்கு ஒருவேளை நம்முடைய கண்கள் பெலமுள்ளவைகளாயிருந்தாலும், அவர்களது கண்களிலிருக்கும் துரும்பைத் தூக்கிப்போட இயலாத அளிவிற்கு நாம் பெலவீனர்களே என்பதை அறிந்துகொள்வது அவசியம். கண்களில் துரும்பை வைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, நம்முடைய உத்திரம் தெரியாதவாறு பத்திரமாகப் பார்த்துக்கொண்டாலும், உத்திரம் ஒருநாள் வெளிப்படும்போது, துரும்புகூட நம்மை தூக்கி வீசிவிடும்.
நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள் (லூக் 11:46) என்றும், மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் (மத் 23:15) என்றும் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்தே இயேசு கிறிஸ்து எச்சரிக்கின்றதை வேதத்தில் வாசிக்கின்றோமே. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை (மாற் 4:22) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே. 'தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்' (சங் 19:12) என்று தாவீதும் பாடுகின்றானே. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய் (ரோம 2:1) என்று பவுலும் எச்சரித்து எழுதுகின்றாரே.
உரியாவின் மனைவியாகிய பத்சேபாளினிடத்தில் பிரவேசித்ததினால், பாவம் செய்த தாவீது, தன்னுடைய வாழ்க்கையில் உத்திரத்தைச் சுமந்துகொண்டிருக்கும்போதே, அவன் உணர்வடையும்படி நாத்தான் தீர்க்கதரிசியினால் உவமையாகச் சொல்லப்பட்ட மனுஷன்மேல் மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் (2சாமு 12:5) என்று கூவினானே.
தன்னிடத்தில் 'சந்ததி இல்லாததற்கு' மருமகளாகிய தாமார் காரணம் அல்ல என்பதுவும், அவள் கருவுற்றபோது நிரூபிக்கப்பட்டதே. தாமார் நிரபராதி என நிரூபிக்கப்பட்டபோது, குற்றவாளிகளின் கூண்டிற்குள் நின்றது யூதாவின் குடும்பம். இந்த நிலை நமக்கு வேண்டாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக