திங்கள், 11 அக்டோபர், 2021

எதிரொலி (ஆதி 24:60)

எதிரொலி



ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். (ஆதி 24:60)


ஆபிரகாமை ஆண்டவர் அழைத்தபோது, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதி 12:2) என்றும், உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும் (ஆதி 13:16) என்றும், நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் (ஆதி 15:5) என்றும்  சொன்னதுடன், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் (ஆதி 22:17) என்றும் சொல்லி அவனை ஆசீர்வதித்தார். 

  இஸ்மவேலைக் குறித்தோ, அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் (ஆதி 16:12) என்றார் ஆண்டவர். அப்பொழுது இஸ்மவேலின் தாயாகிய ஆகார்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள். ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவாகவும் (ஆதி 16:13,14),  சூருக்குப் போகிற வழியருகிலேயும் (ஆதி. 16:7) காணப்பட்டது. கருவாக இஸ்மவேல் இருந்தபோது ஆண்டவர் ஆகாரைச் சந்தித்த இடத்தண்டையிலேயே ஈசாக்கு குடியிருக்கிறான். ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுவந்தபோது, ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான் என்றும், லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான் என்றும்,   ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான் (ஆதி 24:62,63) என்றும் வாசிக்கின்றோமே. ஒருவேளை, ஆகார் ஆபிரகாமின் வீட்டை விட்டு இஸ்மவேலை கருவாக வயிற்றில் சுமந்தவாறு ஓடிப்போனபோது, 'லாகாய்ரோயீ' என்ற துரவண்டையில் ஆண்டவர் அவளைச் சந்தித்ததை ஈசாக்கு கேள்விப்பட்டிருக்கக்கூடும். தேவன் ஆகாரைச் சந்தித்த இடத்தையே தனது குடியிருப்புக்காக ஈசாக்கு தெரிந்துகொண்டான். ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான் (ஆதி 25:11) என்று வேதம் கூறுகின்றதே. என் தாயாகிய ஆகாருக்கு ஆண்டவர் தரிசனமான இடம் என்று இஸ்மவேல் சுதந்தரித்துக்கொள்ளும் முன் ஈசாக்கு அதனைச் சுதந்தரித்துக்கொண்டதனை, ஆதி. 22:17 -ன் நிறைவேறுதலாகவே நாம் காணமுடியும். 

ஈசாக்கின் வாழ்க்கையில் நிறைவேறத் தொடங்கிவிட்ட இந்த வாக்குத்தத்தத்தை, உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக (ஆதி 24:60) என்று ரெபெக்காளின் வீட்டாரும் சொல்லி ஆசீர்வதிப்பது ஆச்சரியமானது. ஆண்டவர் ஆபிரகாமினிடத்தில் கூறின வாக்குத்தத்தம், ரெபெக்காளின் வீட்டில் எதிரொலிப்பது எப்படி? இரண்டு பக்கத்தையும் நானே ஆயத்தப்படுத்தியிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும்படியாக ஆண்டவரால் வரும் சத்தமே. தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன் (சங் 62:11) என்று தாவீது கூறுகின்றானே.  

நாம் சுவிசேஷம் அறிவிக்கும்படியாகச் செல்லும் இடங்களிலும், நம்மிடத்தில் ஆண்டவர் பேசினவைகளுக்கு ஒத்த வார்த்தைகளை மனிதர்கள் பேசக்கூடும்; அது, மறுபுறமும் ஆயத்தம் என்பதற்கான சத்தமே. நாம் எதிர்பார்க்கும் வார்த்தைகள் எதிர்புறமும் ஒலித்தால், அது நமது வெற்றிக்கானதே. யோனத்தான் தனது ஆயுததாரியாகிய வாலிபனுடன் பெலிஸ்தரின் தாணயத்தை நோக்கிச் சென்றபோது, 'எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள்' என்ற வார்த்தை, எதிரிகளின் வாயிலிருந்து பிரதியொலியாக வந்ததே (1சாமு. 14:10,12); அது வெற்றிக்கான அடையாளமே. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக