உடனிருந்தால் உடைந்துவிடோம்
அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். (ஆதி 31:5)
மாறாமலிருக்கும் தேவனை விட்டுவிட்டு, மாறிப்போகின்றவைகளோடு மனிதன் தனது வாழ்க்கையை ஒட்டவைத்துக்கொள்வதினால், விட்டுப் பிரியும் நேரம் வரும்போது வருத்தத்தினால் நிறைந்துவிடுகிறான். மனிதர்களையே சார்ந்து வாழப் பழகுவோரின் மனம், தேவனை விட்டுத் தூரமாகச் பயணித்துவிடும். மனிதர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, மனமுடையச் செய்துவிடக்கூடும்; ஆனால், தேவன் மேல் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையோ மனமுடையும் நேரத்திலும் மருந்தாக மாறும். மனிதர்கள் கைவிட்டுவிட்டாலும், கைவிடாதிருக்கும் கர்த்தரின் கரம் நமக்கு உண்டு. மனிதர்களை நேசிப்பதற்காக தன் சொந்தக் குமாரனையே ஈவாகக் கொடுத்தவர் நம்முடைய தேவன். இன்றும் அவருடைய அன்பிலே மாற்றமில்லை. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (எபி 13:8) என்பதே வேதம் தரும் வெளிப்பாடு; என்றபோதிலும், மனிதர்களிடத்தில் இந்த மனநிலையினை நாம் எதிர்பார்த்துவிடமுடியாது. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11); எனினும், ஏற்றுக்கொள்ளாதவர்களுக்காக தன்னையே சிலுவையில் பலியாகக் கொடுத்து இரத்தத்தை ரட்சிப்பின் சொத்தாக, தனக்குச் சொந்தமானதிலேயே, சொந்தமானவர்களுக்காகச் சிந்தினாரே.
'நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை' (மல். 3:6) என்பதல்லவோ ஆண்டவரைக் குறித்து வேதம் தரும் அறிமுகம். மேலும், முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லை (ஏசா 45:23) என்ற உறுதியும் தீர்க்கதரிசியின் மூலமாக அவரால் நமக்குக் தந்தருளப்பட்டிருக்கின்றதே. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல (1சாமு 15:29) என்று சாமுவேலும், கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலும் இருப்பார் (சங். 110:4) என்று தாவீதும் அவரது குணத்தை வெளிப்படுத்துகின்றனரே.
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி 28:15) என்று யாக்கோபுக்கு வாக்களித்திருந்தார் ஆண்டவர். வீட்டை விட்டு தூரமாகச் சென்ற யாக்கோபு, மாமனாகிய லாபானுடைய வீட்டில் தஞ்சம் அடைந்தான். முழு மனதோடு மாமனாகிய லாபான் தன்னை ஏற்றுக்கொண்டதைப்போலவே தொடக்கத்தில் யாக்கோபுக்குத் தென்பட்டது. 'லாபான் கூட இருக்கிறார்; எனவே, இனி எதற்கும் கவலையில்லை, என் வாழ்விற்கான தேவைகள் அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்ளுவார்' என்றே யாக்கோபு ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். வாழ்க்கையின் அத்தனை தேவைகளுக்காகவும் மாமனாகிய லாபானின் முகத்தையே யாக்கோபு நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்திருக்கக்கூடும். என்றபோதிலும், யாக்கோபின் இந்த நினைவு விரைவில் நீர்த்துப்போனது.
தேவன் மீதிருக்கும் நம்பிக்கை நம்மிலே குறையத் தொடங்கும்போது, நாம் நம்பியிருக்கும் மனிதர்களை நம்மிடத்திலிருந்து வேரறுத்து, அவர்மீதான நம்பிக்கையை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துபவர் நமது தேவன். உறவினர்களோ, நண்பர்களோ, நம்பியிருக்கும் பணியிடமோ நம்மை வெறுக்கும் நேரத்திலே, 'தேவன் என்னோடு கூட இருக்கிறார்' என்பதை அறிக்கை செய்ய நாம் மறந்துவிடக்கூடாது. 'கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்' (சங். 118:6,7) என்பதிலும், மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங். 118:9) என்பதிலும் நம்முடைய மனம் உறுதியாயிருந்தால், மனமுடைந்துவிடாமல், மறுவாழ்வுக்கு ஆயத்தமாகிவிடுவோம்; 'எல்லாம் நன்மைக்கே' என்று துதிபாடுவோம்; இழப்பாக அல்ல, மனிதர்களின் வெறுப்பை மனந்திரும்புதலுக்கானது என மனம் ஏற்றுக்கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக