ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஆராதனை ஆண்டவருக்கே (ஆதி 18:2,3)

ஆராதனை ஆண்டவருக்கே


(ஆபிராம்) தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து:  ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். (ஆதி 18:2,3)


மம்ரேயின் சமபூமியில் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, மூன்று புருஷர்களை ஆபிராம் கண்டபோதிலும், அருகில் சென்றபோதோ அவர்களுள் ஒருவர் 'ஆண்டவர்' என்பதை அறிந்துகொண்டதும், அவரையே தரைமட்டும் குனிந்து வணங்குகின்றான். தூதர்களுக்கும், ஆண்டவருக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தவன் ஆபிராம். என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர் (உன் 5:10) என்று மணவாட்டி மணவாளனை அடையாளம் கண்டுகொள்வதைப்போல, ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்வது அழைக்கப்பட்டவர்களுக்கு எளிதானது. மேய்ப்பன் ஆடுகளை அறிந்திருக்கிறதோடு மாத்திரமல்ல, ஆடுகளின் அறிவிலும் மேய்ப்பன் இருப்பதையே ஆபிரகாமின் இந்த சந்திப்பு உறுதிப்படுத்துகின்றது (யோவான் 10:3,4,27). உபசரிப்பு மூன்று பேருக்கும் கிடைத்தாலும், உரையாடலோ ஆண்டவர் ஒருவரோடு கூட மாத்திமே நடக்கின்றது. 

ஆண்டவருக்கான ஆராதனையை மனிதரிடமிருந்து பிடுங்கி தனக்கானதாக அதனை மாற்றிவிட சத்துரு பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறான். பிசாசின் இத்தகைய குணத்தை நமக்கு வெளிப்படுத்தவே, பிசாசினால் சோதிக்கப்படும்படி ஆவியானவரால் இயேசு கிறிஸ்து வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். சோதனையின்போது இயேசு கிறிஸ்துவைச் சந்தித்த பிசாசு, 'நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்' என்று சொன்னான் (மத் 4:9). இதன் பொருள், பிதாவினிடமிருந்து இயேசு கிறிஸ்துவைப் பிரித்துவிடவேண்டும் என்ற சாத்தியமில்லாததை தனது சிந்தையில் அவன் வைத்திருந்ததே. 'பிதாவை விட்டுவிட்டு, பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு' இன்றும் சாத்தானைப் பணிந்துகொள்ளும் மக்கள் அநேகர். அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே (1சாமு. 7:3,4) (மத் 4:10) என்று இயேசு கிறிஸ்துவைப்போல பிதாவைப் பிடித்துக்கொள்பவர்களே பிள்ளைகள். இலவசங்களுக்காக இயேசு கிறிஸ்துவை அல்ல, எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் (பிலி 3:7) என்ற எண்ணமுடையவர்களே போரிடும் சாத்தானோடு போராடி வெற்றிகொள்ள முடியும். 

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தபோது, சாஸ்திரிகள் எருசலேமிலிருந்து ஏரோது ராஜாவின் அரண்மனைக்கு வந்தபோதும், 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்றே கூறுகிறார்கள் (மத் 2:2); அவர்களை அனுப்பிவைத்த ஏரோதுவும்கூட, 'நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள்' என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான் (மத் 2:8). இயேசு கிறிஸ்து பிறந்திருந்த வீட்டிற்குள் சாஸ்திரிகள் பிரவேசித்தபோது, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ;டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள் (மத் 2:11). 

கொர்நேலியுவின் வீட்டிற்குள்ளே பேதுரு பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் (அப் 10:26) என்று அதனைத் தடுத்தான். எலியா எத்தனை பெரிய தீர்க்கதரிசியாயிருந்தாலும், 'நம்மைப்போலப் பாடுள்ள மனுஷன்தான்' (யாக். 5:17) என்று யாக்கோபு எழுகின்றாரே. பொருட்களுக்காக சத்துருவை பணிந்துகொள்ளாமலும், உலக மதிப்பிற்காக மனுஷன் என்ற ஸ்தானத்தை மறந்துவிடாமலும் இருப்போம். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக