சனி, 9 அக்டோபர், 2021

பாடுகளின் பயணம் (ஆதி 37:36)

 

 பாடுகளின் பயணம்


அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். (ஆதி 37:36)


வலிகள் இல்லாத வாழ்க்கையை விரும்பும் மனிதர்களே இன்றைய நாட்களில் பெருகிவருகின்றனர். பாடுகளில் பயணம் தொடங்குமென்றால், பரமன் உடனில்லை என்ற உணர்வுக்கும் தங்கள் உள்ளத்தில் பலர் இடமளித்துவிடுகின்றனர். உபத்திரவங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும், விடுபடவேண்டும் என்றுமான விருப்பத்துடனேயே தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால், தேவராஜ்யத்தை நோக்கிய பாதையிலிருந்து பலருடைய பாதங்கள் விலகியே பயணிக்கத் தொடங்கிவிடுகின்றன. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னது (அப் 14:22) அல்லவோ அப்போஸ்தலர்களின் உபதேசம். என்றபோதிலும், 'வழியான' உபத்திரவத்தை 'வலியாகப்' பார்ப்பதினாலேயே, பலருடைய விழிகள் வேறு திசைகளை நோக்கித் திரும்பிவிடுகின்றன. சுமையில்லாத, சுகமான பெருவழிகளில் நடப்பதையே தெரிந்துகொண்டால், இடுக்கமான வாசலில் பிரவேசிப்பது இயலாததாகிவிடக்கூடும்.

மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஜசுவரியவான்களாக்கு கிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்க ளென்னப்பட்டாலும், சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம் (2கொரி 6:4-10) என்று எழுதும் பவுல், அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2கொரி 12:10) என்றும் எழுதுகின்றாரே. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும்  இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான் என்று கூறும் கர்த்தர், அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் (அப் 9:15,16) என்பதையும் முன்னறிவிக்கத் தவறவில்லையே. 

இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:8-10) என்பதுதான் யோபு செய்த அறிக்கை. பாடுகளைப் புறந்தள்ளியதினாலேயே பலருடைய வாழ்க்கை இன்னும் பொன்னாக மின்னவில்லை. நம்மை வேதனைப்படுத்தும் மனிதர்கள், நமது ஆவிக்குரிய வாழ்க்கையை மிளிரச்செய்யவேண்டும்; மாறாக, குளிரச்செய்துவிடக்கூடாது. நம்மை விரோதிக்கும் சத்துருக்களால், பொன்னான ஆவிக்குரிய குணங்களில் சவரன்கள் கூடவேண்டும்; மாறாக, இருப்பதையும் மண்ணிலே இழந்துவிடக்கூடாது. உபத்திரவத்திற்கு உடன்பங்காளன் என்றல்லவோ யோவானும் தன்னை அறிமுகப்படுத்துகின்றார் (வெளி. 1:9). யோசேப்பின் பயணம் பாடுகளில் தொடங்கி சிங்காசனத்தை அடைந்தது போல, இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் (வெளி 7:14) என்று நம்மையும் பரலோகம் அறிமுகப்படுத்தட்டும், நம்முடைய பயணமும் சிங்காசனத்தில் முடியட்டும் (வெளி. 3:21). காட்டிக்கொடுத்தவனை 'சிநேகிதனே' என்றதும், கட்டி அடித்தவர்களை சிலுவையிலேயே மன்னித்ததும் அல்லவோ சிங்காசனத்திலிருப்பவரின் சிறப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக