காணிக்கையா? கையூட்டா?
அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான். (ஆதி 33:8)
தன்னை ஏற்றுக்கொண்டால் மாத்திரம் போதாது, ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக தான் கொடுக்கும் 'வெகுமதியையும்' ஏசா பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தான் யாக்கோபு. ஏசாவின் முகத்தை சாந்தப்படுத்துவதற்காக வெகுமதிகளையும் முன்னமே அனுப்பியிருந்தான் யாக்கோபு (ஆதி. 32:13-18,20). 'எனக்குப் போதுமானது உண்டு;உன்னுடையது உனக்கு இருக்கட்டும்' என்று ஏசா சொன்னபோதிலும் (ஆதி 33:9), யாக்கோபு விட்டுவிடவில்லை, தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; 'வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்' என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது ஏசா அதை ஏற்றுக்கொண்டான் (ஆதி 33:11). 'எனக்குப் போதுமானது உண்டு' என்று ஏசாவும், 'வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு' என்று யாக்கோபும் சொல்லிக்கொள்வது, அவர்கள் எவ்வித குறைவுமின்றி திருப்தியாக நிறைவுடன் இருந்ததையே குறிக்கின்றது. என்றபோதிலும், ஏசா தன்னை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக, எதையாகிலும் தன்னிடத்திலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற மனநிலை யாக்கோபை நிறைத்திருந்தது. அந்த வெகுமதி 'ஏசாவை திருப்தி செய்ய அல்ல, தன்னைத் தானே திருப்திசெய்துகொள்ளவே.' இன்றும் 'தேவன் திருத்தியமைத்த பின்னும், மனிதர்களையும் தங்களையும் திருப்திப்படுத்தும் மனநிலையோடு பயணிக்கும் மனிதர்கள் உண்டு.'
மேலும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், 'என் வெகுமதியை' என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்' (ஆதி 33:10) என்று தொடக்கத்தில் உச்சரித்த யாக்கோபின் உதடுகள், தொடர்ந்து, உமக்குக் கொண்டு வரப்பட்ட 'என் காணிக்கையை' ஏற்றுக்கொள்ளும் என்று உயர்த்திக் கூறிவிட்டதே (ஆதி 33:11). அதுமாத்திரமல்ல, 'உம்முடைய முகத்தைக் கண்டது, தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது' (ஆதி. 33:10) என்று மிகைப்படுத்தியும் கூறிவிட்டதே. நாமும் உணர்ச்சிவசப்பட்டு, ஆர்வத்தின் மிகுதியினால் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்துவிடக்கூடும். மனிதர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, அவர்கள் மனதைக் குளிரப்பண்ணுவதற்கான 'வெகுமதிகளை' கொண்டுசென்று கொடுத்துவிட்டு, 'காணிக்கை' என்ற பெயரில் தேவனைக் காட்டிலும் அவர்களை உயர்த்திவிடுவோமென்றால், நம்முடைய வாழ்க்கை மனிதர்களின் காலடிக்குச் சென்றுவிடும்.
பலருடைய வாழ்க்கையில், 'வெகுமதி' என்ற வார்த்தை அதன் ஸ்தானத்திலிருந்து விலகி 'கையூட்டாகவே' கருதப்படும் நிலைக்கு வீழ்ந்துவிட்டது. 'எதையாகிலும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனோ, பெற்றுக்கொண்டேன் என்ற எண்ணத்துடனோ வெகுமதி கொடுக்கப்படுமானால் அது கையூட்டே'. 'காணிக்கை என்பது பெற்றுக்கொண்டதற்கான பரிதானமோ அல்லது வாங்கிக்கொண்டதற்கான வட்டியோ அல்ல, மறாக, இவ்விரண்டு எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு உள்ளதிலிருந்து உள்ளத்தால் உண்மையாக கர்த்தருக்கு எடுத்துக்கொடுக்கப்படவேண்டியது.' 'இவ்வளவு கொடுத்தால் எனக்கு இவ்வளவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் காணிக்கையாக கர்த்தருக்குக் கொடுக்கப்படும் பணங்களும் 'கையூட்டாகவே' கருதப்படும், பரலோகக் கணக்கில் அத்தொகை வரவு வைக்கப்படுவதில்லை. தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? (யோபு 41:11) என்றும் தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? (ரோம 11:35) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே.
மனிதர்களுடைய கண்களில் தயவு கிடைக்கிறதற்கு, அவர்களது மனம் விரும்புகின்ற எதையாகிலும் கொடுப்பதற்கு நாம் ஆயத்தமாகிவிடுகிறோம். ஆனால், தேவனுடைய கண்களில் தயவு கிடைக்கிறதற்கு நாம் செய்வது என்ன?
திருப்தியான சகோதரர்களையே மீண்டும் மீண்டும் திருப்தியாக்கிக்கொண்டு, தேவையானவர்களை தேடிச்செல்லாதவர்களாக நாம் காணப்பட்டுவிடக்கூடாது. 'மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' (மத். 25:40) என்றாறே; அப்போது, வெகுமதியும் காணிக்கையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக