திசைகாட்டி
கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடே கூட இருப்பேன் என்றார். (ஆதி. 31:3)
திசைமாறிச் செல்லும் நேரத்தில், திசைகாட்டியாக நமது பாதையில் நின்று, 'திரும்பிப்போ' என்று வழிகாட்டுகிறவர் நம்முடைய கர்த்தர். ஆபிரகாமை கர்த்தர் தெரிந்துகொண்டு அழைத்தபோது, 'நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' (ஆதி. 12:1) என்று சொன்னார். ஆனால், யாக்கோபை நோக்கியோ, 'உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ' (ஆதி. 31:3) என்று கூறுகின்றார். இவ்விரு 'திசைகாட்டலுக்கும் இடையிலான திட்டதை' நாம் புரிந்துகொள்வது அவசியம்.
ஆபிரகாமின் குடும்பம் முழுவதையும் கானானை நோக்கி நகர்த்துவதே தேவனுடைய திட்டம்; என்றபோதிலும், அதற்கு ஆதாரமாகத் தெரிந்துகொள்ளப்பட்டவன் ஆபிரகாம் மாத்திரமே. நோவாவின் குடும்பம் முழுவதும் பேழையில் மிதந்ததற்குக் காரணம் நோவாதானே; அப்படியே, சோதோமிலிருந்து லோத்து காப்பாற்றப்படவிருந்தபோது, அவனது குடும்பத்தினருக்கும் கூட வாய்ப்பு கொடுக்கப்பட்டதே. என்றபோதிலும், பயணத்திற்குப் பிரதானமானவர்களை, உடன் பயணிப்பவர்கள் நிறுத்திவிடும் பரிதாபமான நிலை சிலருடைய வாழ்க்கையில் நிகழ்ந்துவிடக்கூடும். ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்தது இதுவே. தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள் (ஆதி. 11:31). ஆபிரகாமை மையமாகக் கொண்டு, தேராகின் குடும்பம் கானானை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோதிலும், வழியிலே ஆரான்மட்டும் வந்தபோது, அவர்கள் அங்கே இருந்துவிட்டார்கள் (ஆதி. 12:31). ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகு மரிக்கும்வரை, ஆரானைவிட்டு ஆபிரகாமினால் நகர இயலவில்லை. இன்றும் இப்படிப்பட்ட நிலையில் காணப்படுவோர் உண்டு. 'பயணத்தில் பிரதானமானவர்கள் தாங்களே' என்பதை மறந்து, பிறரோடு தங்கிவிடும் மக்கள் அநேகர். அழைப்பினைப் பெற்றபின்னும், பெற்றோர்களாலோ, உறவினர்களாலோ, உடன் சகோதர சகோதரிகளாலோ தடுக்கப்பட்டு, பிணைக்கைதிகளைப் போல பலர் பிடித்துவைக்கப்பட்டுவிடுகிறார்கள். இத்தகையோர், தேவனுடைய பார்வையில் தாங்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ளவும், தேவனுடைய பார்வையில் தங்களுக்கு இருக்கும் பயணத்தைப் புரிந்துகொள்ளவும் வேண்டியது அவசியம். அவருடைய (இயேசுவினுடைய) சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார் (மத். 8:21,22). ஆனால், ஆபிரகாமோ 'தகப்பனை அடக்கம்பண்ணும்வரை' ஆரானிலேயே இருந்துவிட்டானே.
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் (மத். 19:29) என்று இயேசு சொன்னாரே. மேலும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் கற்பித்திருக்கிறாரே (மத். 15:4) என்று கட்டளையாக பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பதை இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகின்றாரே; என்றபோதிலும், அந்த கட்டளை 'இயேசு கிறிஸ்துவுக்குப் பின்னால் செல்லும் மனிதனுடைய அழைப்பினைக் கட்டுப்படுத்துவதில்லை' என்பதையும், கூடவே, 'குடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமைகளுங்கூட அழைக்கப்பட்ட மனிதனை அடக்குவதில்லை' என்பதனையும் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகின்றாரே. அழைக்கப்பட்ட மனிதன் அலைகளையும் கடந்து அவர் காட்டும் திசையினை நோக்கியே நடந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பம். தகப்பனுடைய மரணம் வரை ஆபிரகாமின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததினால், மீண்டும் தனது திட்டத்தினையும், திசையினையும் ஆபிரகாமுக்குச் சுட்டிக்காட்டவேண்டிய நிலை ஆண்டவருக்கு உண்டாயிற்று.
நம்முடைய வாழ்க்கையிலும், தேங்கி நிற்கும் வேளைகளில் தேவகரம் காட்டும் திசையினை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அழைப்புக்கு ஈடாக நாம் செலுத்தும் விலைக்கிரையம் எதுவாகவும் இருக்கக்கூடும்; 'வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது' என்று வரிசைப்படுத்தப்படும் உறவின் வார்த்தைகள், உலகத்தின் பார்வையில் உயர்ந்தவைகளாகக் காணப்பட்டாலும், உடன் பயணிக்க பெலனில்லாவிடில் விலைக்கிரையம் என்ற பெயரில் விட்டுவிடக்கூடியவைகளே. என்றபோதிலும், வீட்டாரும், சகோதரர்களும், சகோதரிகளும், தகப்பனும், தாயும், மனைவியும், பிள்ளைகளும் என அனைவரும் அழைப்பின் திசையினை நோக்கி ஏகமாய் புறப்பட்டுச் செல்வது ஓர் ஆனந்தமான அனுபவமே.
ஆனால், யாக்கோபின் நிலையோ வேறு; அழைக்கப்பட்ட தேசத்திலிருந்த தன் தகப்பனையும், தாயையும், சகோதரனையும் விட்டு, தன்னை அடைத்துவைக்கும் தேசத்தை நோக்கி பயணப்பட்டான். பெற்றோர்களும் அதற்கு உடந்தையாகவே இருந்தார்கள் (ஆதி. 27:44; 28:5. பயணத்தின் வழியில், கர்த்தர் யாக்கோபை நோக்கி, 'நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்' (ஆதி. 28:13) என்று சொல்லியிருந்தபோதிலும், அங்கிருந்தும் அகன்று தூரமாகப் பயணப்பட்டான் யாக்கோபு. பாதையில் பாதுகாப்பும், தங்கியிருந்த இடத்தில் ஆசீர்வாதமும் யாக்கோபை பின்தொடர்ந்தபோதிலும், அழைக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் திரும்பிவரவேண்டும் என்பதிலேயே ஆண்டவர் உறுதியாயிருந்தார்.
எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான் (ஆதி 31:1,2). இந்த சூழ்நிலை தேவனால் அனுமதிக்கப்பட்டதே. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28) என்று பவுல் எழுதும் வரிகள் எத்தனை அனுபவப்பூர்வமானவைகள்.
நம்முடைய வாழ்க்கையில் சூழ்நிலைகள் விகற்பமாய் மாறும்போது, எதிராய் நிற்கும்போது நம்முடைய அழைப்பின் திசையினை ஆராய்ந்து அறிவது அவசியம். நாம் தங்கியிருக்கிற அல்லது தேங்கியிருக்கிற இடத்திலிருந்து நம்மை வெளியேற்றவும், அழைப்பின் திசையினை உணரச்செய்து அதை நோக்கி நம்மைப் பயணிக்கச் செய்யவும் தேவனால் உபயோகப்படும் பாத்திரங்களாக பிறரை தேவன் பயன்படுத்தக்கூடும். நம்மைச் சுற்றியிருப்பவர்களின் முகம் வேறுபட்டிருப்பதின் காரணத்தை நாம் அறிந்துகொண்டால் அவர்கள் மீது கோபப்படாமல், அங்கிருந்து அழைப்பின் திசையினை நோக்கி புறப்பட்டுச் செல்ல நம்மை அர்ப்பணித்துவிடுவோம்.
இன்றைய நாட்களிலும், அழைக்கப்பட்ட இடத்திலிருந்து அகன்று செல்லும் மக்கள் அநேகர். அழைக்கப்பட்ட பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தாங்கள் விட்டுவந்த தேசத்தை நோக்கியும், உலகப்பிரகாரமானவைகளையே முன்நிறுத்தியும் அனுப்பிவிடும் நிலை உண்டாகிவருகின்றது. இஸ்ரவேலர் எகிப்திலே அடிமையென்றால், அடிமைகளுக்குப் பிறந்த பிள்ளைகளும் எகிப்திலே அடிமைகள்தானே; இந்த நிலை அழைக்கப்பட்டோரிடத்தில் மாறுபடுவது ஏன்? அழைக்கப்பட்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் அழைப்பினை நோக்கியே செல்லவேண்டியவர்கள்தானே. எனினும், அழைக்கப்பட்ட மனிதன் மீண்டும் விட்டுச் சென்ற தேசத்திற்கு வரும்போது, விட்டுச் சென்ற தேசம் அழைக்கப்பட்ட மனிதனை அடைத்துவைக்கவே எத்தனிக்கின்றது. யாக்கோபின் வாழ்க்iயே இதற்கு ஓர் உதாரணம். அழைக்கப்பட்ட பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தும், அடைக்கப்பட்ட நிலையில் வாழும் பிள்ளைகள் இன்றும் இந்த உலகத்தில் உண்டே. பிள்ளைகள் என்ற ஸ்தானத்தில் உலகத்தின் எல்லைகளைக் கடந்து அழைப்பினை நோக்கிப் பயணப்பட்டவர்கள், மீண்டும் உலகத்தினை நோக்கித் திரும்பும்போது, உலக எல்லை அவர்களை அடக்கி அடைத்துவைப்பதுடன், அடிமையாகவும் மாற்றிவிடும் தொல்லையே நிச்சயம் நிகழும்.
முடங்கியிருந்த எலியாவுக்கு 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகு தூரம்' (1 இராஜா. 19:7) என்று சொல்லப்பட்டது; திசைமாறிச் சென்ற யோனாவுக்கு திரும்ப அழைத்துவர மீன் ஆயத்தம்பண்ணப்பட்டது (யோனா 1:17); தடுக்கப்பட்டபோதிலும், கர்த்தர் வெறுக்கும் திசையினை நோக்கி தொடர்ந்து முன்னேற முயற்சித்த பிலேயாம் பட்டயமேந்திய தூதனால் தடுத்து உணர்;ததப்பட்டான் (எண். 22:31). திசைகாட்டியை புரிந்துகொள்ளாவிட்டால், அழைப்பினையும், திட்டத்தினையும் விட்டு தூரமாகவே திரிந்துகொண்டிருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக