திங்கள், 11 அக்டோபர், 2021

எரிந்துபோன எகிப்து! (ஆதி 19:13)

 எரிந்துபோன எகிப்து!


நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். (ஆதி 19:13)

  

'தரிசனத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களைத் திசைதிருப்பி தன்வழியில் தடம்பதிக்கச் செய்ய சத்துரு எப்போதும் தொடருவான்.' ஆத்துமாவைச் சிக்கவைக்க விரித்துவைக்கப்பட்டிருக்கும் வலையினை ஆவிக்குரிய கண்களால் பார்த்து, பசுமை என்று புகுந்துவிட்டால் பலியாகிவிடுவோம்;. லோத்து ஆபிரகாமை விட்டுப் பிரிந்தபோது, 'கண்களுக்கு செழிப்பானச்' சமபூமியியைத் தெரிந்துகொண்டான்; என்றாலும், அக்கிரமமான மனிதர்களால், அது அக்கினிக்கு இறையாகப்போகிறது என்பதையோ அவன் அறியாதிருந்தான். நமது கண்களுக்கும், மனதுக்கும் விருப்பமானவைகளைத் தெரிந்துகொண்டு; நம்மை நாமே அழிவுக்குள் தள்ளிவிடக்கூடாது. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசா 55:8,9) என்ற ஆண்டவரது வழி நமது விழிகளுக்குத் தெரியட்டும். தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்து (யோவா 7:24) தீர்மானங்களை எடுப்போம். 

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.  இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 24:1,2). இன்றும், மனிதர்களை ஆலயங்களாகப் பார்க்காமல், ஆலயத்தின் அலங்காரங்களிலேயே மூழ்கியிருக்கும் மனிதர்கள் உண்டு. சில நேரங்களில் நாமும் நமது கண்களையே சார்ந்து நிற்கிறோம்; இதனால், பார்வைக்குப் பின் பதுங்கியிருக்கும் சத்துருவின் பிடியில் அகப்பட்டுக்கொள்கிறோம். இந்த பூமியைத்தான் நமது சொந்ததேசம் போலவும், இந்த பூமியில் எல்லாம் கிடைத்துவிட்டால் உள்ளம் நிறைவாகிவிடும் என்பதைப்போலவும் உணர்ந்து, ஆத்துமாவுக்கடுத்தவைகளிலிருந்து அகன்று பயணிக்கின்றோம். 

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள் (ஆதி 13:1); ஒருமுறை பட்டதும், பாடம் கற்றுக்கொண்டான் ஆபிரகாம்; ஆனால் லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது (வெளியிலே) கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் (உள்ளேயோ) எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது (ஆதி 13:10). லோத்துவோ, மீண்டும் 'எகிப்து தேசத்தைப் போன்ற' இடத்திற்குள் நுழைந்துவிட்டான். பாலும் தேனும் ஓடுகின்றதாக கானானை ஆபிரகாமுக்கு ஆயத்தம் செய்துகொடுத்தார் கர்த்தர்; ஆனால், லோத்து குடியிருந்த பட்டணமோ பாலைவனமானது. நம்முடைய கண்களுக்குச் செழிப்பாகத் தோன்றும் காரியங்கள், கர்த்தரின் பார்வையில் எப்படிப்பட்டது என்று அறியாமற்போனால், எல்லாவற்றையும் இழந்து, உயிர்தப்பும்படியாக ஓடிப்போன லோத்துவின் நிலைதான் நமக்கும் உண்டாகும். 

லோத்துவின் பொருட்கள் சோதோமில் கொள்ளையடிக்கப்பட்டபோது, ஆபிரகாமின் மூலமாக கர்த்தர் அதனை மீட்டுக் கொடுத்தார்; ஆனால், மீண்டும் சோதோமிலேயே லோத்து குடியிருந்தபோதோ, அதே பொருட்கள் வானத்திலிருந்து விழுந்த அக்கினியினால் கொளுத்தப்பட்டுப்போயிற்று. தவறான இடத்தைத் தெரிந்துகொண்டதினாலேயே இத்தகைய நிலை தனக்கு உண்டாகிவிட்டது என்பதை உணராமல், மீண்டும் 

சோதோமிலேயே தஞ்சம் புகுந்ததால், எஞ்சியிருந்ததும் எரிக்கப்பட்டுப்போயிற்று. நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் போராட்டங்களைக் குறித்து, ஏன்? என்ற அறிவு நமக்கு உண்டா? அல்லது எத்தனை முறை கர்த்தர் நம்மைக் காப்பாற்றிக்கொண்டேயிருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே நிலையில்தான் நம்முடைய வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றோமா? 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக