ஓநாயாக்காதே, ஓநாயாகாதே
ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய், உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு. (ஆதி 27:43,44)
ஓநாய் என்று கண்டுபிடிக்கப்பட்டால் ஓர் நாள் தகப்பனின் சமுகத்தை விட்டு ஓடிப்போகத்தான் நேரிடும். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள யாக்கோபுக்கு தவறான முறையில் ஆலோசனை கொடுத்த ரெபெக்காள், தவற்றினிமித்தம் வரவிருந்த ஆபத்திலிருந்தும் அவனைக் காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டாள். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி. 10:22) என்பதுதானே வேதம் வெளிப்படுத்தும் வழிமுறை. இந்த வழிமுறையிலிருந்து வழிவிலகினதினாலேயே வாழ்க்கையில் வலி கூடிக்கொண்டது. புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள் (நீதி. 14:1) என்று வாசிக்கின்றோமே. தன் கைகளினால் ருசியான ஆகாரத்தைச் சமைத்து யாக்கோபின் மூலமாக கணவனான ஈசாக்கிற்குக் கொடுத்து; ஈசாக்கினுடைய கனவைத் தகர்த்து, அத்துடன் ஏசா மற்றும் யாக்கோபின் சகோதர உறவும் உடைந்துபோவதற்கு ரெபெக்காள் காரணமாகிவிட்டாளே.
'என் மகனே' என்று ஈசாக்கு ஏசாவை அழைப்பதும் (ஆதி. 27:1); 'என் மகனே' என்று ரெபெக்காள் யாக்கோபை அழைப்பதும் (ஆதி. 27:8), பிள்ளைகளையே பங்கிட்டுக்கொண்ட பெற்றோர்களாகத்தானே ஈசாக்கையும் ரெபெக்காளையும் சுட்டிக்காட்டகின்றது. இன்றைய நாட்களிலும், 'நீ அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா?' என்ற கேள்விகளைக் கேட்டு, விஷமான விதைகளை பிள்ளைகளின் நெஞ்சில் விதைத்துவிடுவோர் உண்டே. பாசத்தைப் பங்குவைத்துவிட்டதால், பிரிந்து நிற்கும் குடும்பங்களும் உண்டே. 'தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்' (மத். 19:6) என்ற கட்டளை கணவன் மனைவிக்கு மாத்திரமல்ல, உடன்பிறந்த பிள்ளைகளுக்கும் பொருந்தக்கூடியதே.
என்மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும் (ஆதி 27:13) என்ற ரெபெக்காளின் வார்த்தைகள், எத்தனையாய் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள் என்பதை வெளிக்காட்டுகின்றதே. ஏசாவினிடத்தில் பிரியம் வைக்க மனமில்லை; ஆனால், 'ஏசாவின் நல்ல வஸ்திரங்களை மட்டும் தன்னிடத்தில் வைத்திருந்தாள் ரெபெக்காள்' (ஆதி. 27:15). ஏசாவின் வஸ்திரத்தையே யாக்கோபுக்குத் தரிப்பித்து கணவனாகிய ஈசாக்கினிடத்தில் அனுப்பிவைத்தாள் ரெபெக்காள். ஏமாற்றுவோர் கைகளில் நம்முடைய வஸ்திரம் சிக்கிக்கொள்ளக்கூடாது. வஸ்திரத்தினால் மூடிக்கொள்ள இயலாத யாக்கோபினுடைய சரீரத்தின் கைகளையும், கழுத்தையும் வெள்ளாட்டுத் தோலினால் மூடினாள் ரெபெக்காள். (ஆதி. 27:16) தகப்பனாகிய ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்று சொன்னபோது, யாக்கோபு கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை நோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது என்று சொன்னான் ஈசாக்கு (ஆதி. 27: 26,27). ஏசாவின் வஸ்திரங்களின் வாசனையையே ஈசாக்கு நுகர்ந்தான். 'வஸ்திரங்களின் வாசனையை குமாரனுடைய வாசனையா-கவே நினைவுகூறுகிறான் ஈசாக்கு' (ஆதி. 27:27). வஸ்திரங்களை போர்த்திக்கொண்டு நம்மை யாரும் ஏமாற்றிவிடக்கூடாதே.
வஸ்திரங்களைப் போர்த்திக்கொண்டு வருவோரிடத்தில் நாமும் ஏமாந்துவிடக்கூடாது. கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத் 7:15) என்று எச்சரிக்கின்றார் இயேசு கிறிஸ்து. இன்றைய நாட்களிலும், போதகர்கள், தீர்க்கதரிசிகள், ஊழியர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் என்ற போர்வையில் ஓநாய்களாக உலாவும் மனிதர்கள் உண்டு. எனவே, மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் (மத் 23:14) என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தாரே. கள்ளத் தீர்க்கதரிசிகளைக் கண்டுகொள்ளக்கூடிய கண்கள் இல்லாத பார்வையற்ற குருடர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். பார்வையற்றவர்களாக நாம் வாழுவோமென்றால், ஓநாய்களினால் பட்சிக்கப்பட்டுவிடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக