திசை மாறிய ஏசா
ஏசா .... தான் கானான்தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான். (ஆதி 36:6)
நம்முடைய வாழ்க்கையின் சந்தோஷம், பிறருடைய வாழ்க்கைக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. சுதந்தரிக்கவேண்டிய தேசத்தை விட்டுவிட்டு, தேசாந்திரியாகவும் நாம் திரிந்துவிடக்கூடாது. வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகள், நமக்கு வலிகளைக் கொண்டுவருவதுடன், வழிமாறவும் செய்துவிடும். ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்; மணவாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு, பெற்றோருக்கு மனமடிவைக் கொண்டுவந்தது (ஆதி 26:34,35). அவ்வாறே, ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும், மேலும், கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான் (ஆதி 28:6-9); அவனுடைய தவறுகள் தொடர்ந்தது. தன்னுடைய வாழ்க்கையின் சந்தோஷத்தை மாத்திரம் தேடி, தகப்பனை சந்தோஷத்திற்குத் தூரமாக வாழ்ந்துகொண்டிருந்தான் ஏசா.
அதுமாத்திரமல்ல, அடக்கம்பண்ணுவதற்காக வாங்கப்பட்ட நிலைத்தை மட்டுமே, சுதந்திர பூமியாக நினைத்துக்கொண்டிருந்தான் ஏசா. சாராள் மரித்தபோது, ஆபிரகாம் ஏத்தின் புத்திரரோடே பேசி, நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்று சொல்லி, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோனின் நிலத்தின் கடைசியில் இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை நானூறு சேக்கல் நிறை வெள்ளிக்கு வாங்கி, அதிலே சாராளின் சரீரத்தை அடக்கம்பண்ணினான் (ஆதி. 23:2-18). ஆபிரகாம் மரித்தபோதும் அந்த குகையிலேயே அடக்கம்பண்ணப்பட்டான் (ஆதி. 25:9). ஆபிரகாமின் குமாரனான ஈசாக்கும், மம்ரேயிலே எபிரோன் என்னும் ஊரிலேயே தங்கியிருந்ததினால் (ஆதி. 35:27), ஈசாக்கு மரித்தபோதும், ஏசாவும் யாக்கோபும் அவனை மக்பேலா குகையிலேயே அடக்கம்பண்ணியிருக்கவேண்டும் (ஆதி. 35:29). சோகாருடைய குமாரனாகிய எப்பெரோனின் பெயரினாலேயே அந்த ஊர் 'எபிரோன்' என்று அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.
எபிரோன் கானான் தேசத்திலேயே இருந்தது (ஆதி. 23:2). மேலும், ஏத்தின் புத்திரருக்கு ஆபிரகாமின் மீது அதிக மரியாதை இருந்தது (ஆதி. 23:6). ஒருவேளை ஆபிரகாமின் பேரன் என்ற நிலையில், ஏசாவுக்கும் ஏத்தியர்களின் மத்தியில் அதிக மரியாதையும் செல்வாக்கும் கிடைத்திருக்கக்கூடும். எனவே, தனக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும் இடத்தினையே தனக்குச் சொந்தமான பூமியாக மாற்றிக்கொள்ள நினைத்தான் ஏசா.
யாக்கோபு மரித்தபோது அவனை மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள் (ஆதி 50:13) என்று நாம் வாசித்தாலும், யாக்கோபை அந்த குகையில் அடக்கம்பண்ணுவதற்கு ஏசா தன்னால் இயன்றவரை எதிர்த்து நின்றான் என்பதும், எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட யாக்கோபின் சரீரம், யோசேப்பின் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னரே அடக்கம்பண்ணப்பட்டது என்பதுமே வரலாறு. லாபானுடைய வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்த யாக்கோபைச் சந்தித்தபோது, 'நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன்' (ஆதி. 33:12) என்று ஏசா சொன்னபோதிலும், உயிரற்ற உடலாக யாக்கோபின் சரீரம் வரும்போது, அதனை ஏற்றுக்கொள்ளவோ ஏசாவின் மனம் ஆயத்தமாக இல்லை. அந்த குகை தனக்கே சொந்தம் என தர்க்கித்தான். சுதந்தரிக்கவேண்டியதை மறந்து, 'சுயம்' என்ற வலைக்குள் நாம் சிக்கிக்கொண்டால், அடக்கம்பண்ணும் இடத்தைக்கூட அடுத்தவருக்குக் கொடுக்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக