பாசமா? பகையா?
தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். (ஆதி. 30:36)
தந்திரமாக மனிதர்கள் தரையில் விரிக்கும் வலைகளுக்கும் தம்முடைய பிள்ளைகளைத் தப்பித்துக்கொள்ளச் செய்பவர் ஆண்டவர். 'சம்பளம்' என்ற பெயரில் எதையாகிலும் கொடுத்து யாக்கோபை சம்மதிக்கச் செய்துவிட்டு, ஆசீர்வாதங்களை மாத்திரம் எப்படியாவது தன் வசமாக அள்ளிக்; கொண்டுவந்து சேர்த்;துவிடவேண்டும் என்பதில் குறியாயிருந்தான் லாபான். யாக்கோபுக்குக் கிடைப்பதைக் குறித்து அல்ல, தனக்குக் கிடைப்பதைக் குறித்தே லாபான் அதிக நோக்கமாயிருந்தான். தனக்கு அதிகம் வந்துசேரவேண்டும் என்ற விருப்பத்திலிருந்த லாபானின் கண்கள், யாக்கோபுக்கு என்ன கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தன. லாபானின் குமாரர்களுடைய பார்வையும் அப்படியே இருந்தது (ஆதி. 31:1). அதுவே, பத்துமுறை யாக்கோபின் சம்பளத்தை மாற்றும்படியாக லாபானைத் தூண்டிவிட்டது (ஆதி. 31:7). 'வெறுங்கையாய்' யாக்கோபை அனுப்பிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு, வஞ்சகமாக லாபான் வகுத்த வழிமுறைகளிலிருந்தும் கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார். மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என்பதிலேயே நமது கண்களை பதியவிட்டால், அவர்களோடுகூடவே நம்மை ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தால், பாசம் மறந்து பகைமை பிறந்துவிடும்.
புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும் (ஆதி 30:32) என்று யாக்கோபு சொன்னபோது, அதுவரைக்கும் மந்தையில் இருந்த, கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களைக்கூட சம்பளமாக யாக்கோபுக்குக் கொடுக்க மனதற்றவனாக, முன்னிருந்த புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்துவிட்டதோடு (ஆதி 30:35), அப்படிப்பட்ட ஆடுகளுக்கும் தனது மந்தைக்கும் எவ்வித சம்பந்தமும் இருந்துவிடாதபடி தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படியாகவும் அவைகளை வைத்துவிட்டான் லாபான் (ஆதி. 30:36). ஒருவேளை அப்படிப்பட்ட ஆடுகள் தன்னுடைய மந்தையில் இருந்தால், அதைப்போன்ற குட்டிகள் பிறந்து, அவைகள் யாக்கோபின் சம்பளமாகச் சேர்ந்துவிடக்கூடும் என்று லாபான் நினைத்திருந்திருக்கக்கூடும். எனினும், கர்த்தர் அதனை சாத்தியப்படுத்தினார். (ஆதி. 31:10)
யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைத்தான் (ஆதி. 30:7,8), தன்னுடைய பங்கை யாக்கோபு நிறைவேற்றினான்; தேவனோ, லாபானுடைய ஆடுகளை எடுத்து யாக்கோபுக்குக் கொடுத்தார் (ஆதி 31:9). பத்துமுறை லாபான் சம்பளத்தை மாற்றியபோதிலும், யாக்கோபுக்கு தீங்குசெய்ய தேவன் லாபானுக்கு இடங்கொடுக்கவில்லை. புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறiமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது (ஆதி 31:8).
இன்றும், 'சம்பளமாக' எதையாவது கொடுத்து சம்மதிக்கச் செய்துவிட்டு, மந்தையின் இலாபமெல்லாம் தங்களையும் தங்கள் குமாரர்களையுமே வந்துசேரவேண்டும் என்று விரும்பும் ஊழியர்கள் உண்டு. லாபான் பத்துமுறை யாக்கோபின் சம்பளத்தை மாற்றினதைப் போல, பிறரது பிரயாசத்தின் பலன் அவர்களுக்குக் கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வியூகம் வகுக்கும் மனிதர்கள் உண்டு. உலகப்பிரகாரமான தொடர்புகளிலிருந்து அப்படிப்பட்டோர் ஒருவேளை நம்மைத் துண்டித்துவிடக்கூடும்; ஆனால், ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலான தொடர்பிலிருந்து நம்மைத் துரத்திவிடவோ, தூரமாக்கிவிடவோ அவர்களால் கூடாதே. நம்முடைய பங்கை நாம் நிறைவேற்றிக்கொண்டேயிருப் போமென்றால், நமக்குரிய பங்கை ஆண்டவரே கொடுப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக