அடக்கமும், தொடக்கமும்
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். (ஆதி. 35:19,20)
மனிதன் ஒருவேளை தோற்றுப்போனாலும், பிசாசுக்கு எதிரான போரில் தொடர்ந்து முன்னேறுகிறவர் பிதா. யாக்கோபின் மனைவியாகிய ராகேல் விக்கிரகத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தவள். தகப்பனுடைய சுரூபங்களையே திருடிக்கொண்டுவந்தவள் (ஆதி. 31:19). லாபான் யாக்கோபை தேடிவந்தபோது, யாக்கோபை நோக்கி: இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்றே கேட்டான் (ஆதி. 31:30) என்றும், ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள் (ஆதி. 31:34) என்றும், தகப்பன் தேடிவந்தபோது, அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக் குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை (ஆதி. 31:35) என்றும் எழுதப்பட்டுள்ள வசனங்கள், திருடப்பட்டவைகள் ஒரு சுரூபம் அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சுரூபங்கள் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றனவே.
ராகேல் பிள்ளையில்லாதிருந்தபோது, தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள் (ஆதி. 30:22-24). 'ராகேலை நினைத்தருளி, கர்ப்பந்தரிக்கும்படிச் செய்து, நிந்தையை நீக்கியது தேவனே' என்றபோதிலும், தன் தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்போதோ, தன் தகப்பனுடைய தெய்வங்களைத் திருடிக்கொண்டு செல்கிறாள்.
திருடிக்கொண்டு செல்வது மாத்திரமல்ல, தகப்பனிடமிருந்து அவைகளை மறைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில், ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்ததினால் (ஆதி 31:34), கர்த்தர் ஆசீர்வதித்த கர்ப்பத்தின் வாசலில், மீண்டும் சுரூபங்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டாளே; விளைவு வாழ்க்கையையே இழக்கும் நிலை உண்டாகிவிட்டது. கர்ப்பத்தின் வாசலிலிருந்து அடுத்த குமாரன் வெளிப்படும்போது, கல்லறைக்குச் சென்றுவிட்டாயே (ஆதி. 35:19). இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றே சொன்னாள் ராகேல் (ஆதி 30:24); ஆனால், அந்நிய தெய்வங்களையும் உடன் எடுத்துக்கொண்டாளே. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டபின் அந்நிய தெய்வங்களுக்கு இடங்கொடுத்தால் நம்முடைய வாழ்க்கையும் சின்னாபின்னமாகிவிடும். வீடு, தொழில் போன்றவைகள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்க, அவைகளின் வாசல்களில் அருவருப்புகளை கொண்டுவந்து வைத்தால், அது, 'நம்மை நாமே அடக்கம்பண்ணிவிடுவதற்கே சமமாகிவிடும்.'
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள் (ஆதி 35:19). ராகேல் அடக்கம்பண்ணப்பட்ட ஊரிலேயே இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது எத்தனை ஆச்சரியமானது. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா 5:2) என்று தீர்க்கதரிசி உரைத்தானே. யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்களே (மத் 2:6). விக்கிரகத்தைச் சுமப்பதினால் வரும் மரணத்திலிருந்து நம்மை தடுப்தற்கே, மரணத்திற்கான தூண் நிறுத்தப்பட்ட ஊரிலிருந்து (ஆதி. 35:20), மறுவாழ்விற்கான பயணத்தைத் தொடங்கினார் இயேசு கிறிஸ்து. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதி 3:15) என்றார் ஆண்டவர். 'பெண்ணுக்கும் பிசாசுக்கும் நடந்த யுத்தத்தில் யுத்தத்தில் விழுந்துபோனாள் ராகேல்; ஏவாளும் அப்படியே; ஆனால், வித்துக்கும், வித்துக்கும் உண்டான யுத்தமோ சத்துருவின் தலையை நசுக்கினது.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக