திங்கள், 11 அக்டோபர், 2021

அக்கினியில் அழிவில்லை (ஆதி 19:23)

 அக்கினியில் அழிவில்லை


லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. (ஆதி 19:23)


நீதிமான்களுக்கு கர்த்தர் வழிகாட்டும் வெளிச்சமாயிருக்கிறார்; ஆனால், துன்மார்க்கர்களுக்கோ அவர்; அழிக்கும் அக்கினியாயிருக்கிறார். இதனையே சங்கீதக்காரனும், 'கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்' (சங் 1:6) என்று தனது எழுத்திலே உறுதிப்படுத்துகின்றான். அப்படியே எலியாவும், 'நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது' (2இராஜா. 1:12) என்று அதிகாரமுடன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமும் இதுதானே. 

ஒளியிலிருக்கிற நம்மைச் சுற்றிலும் அவர் அக்கினி மதிலாயிருக்கிறார் என்பது பரிசுத்தத்தைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பான மதிலைச்; சுட்டிக்காட்டும் சத்தியமே. சாத்தான் யோபுவைத் தொடர்ந்தும் தொடமுடியாமற்போனதற்கான காரணமும் இதுவே. 'எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியலாம்' (1பேது 5:8); ஆனால், அவருடைய அனுமதியில்லாவிட்டால் வேலிக்கு வெளியேதான் அவன் நிற்கநேரிடும்; அக்கினியைத் தாண்டி அவரை அண்டியிருப்போரைத் தொட்டுவிடுவது சாத்தியமானதல்லவே. அத்துடன், 'நம்மை விழுங்கும்படியாக அல்ல, நாம் வெற்றிபெறும்படியாகவே' நம்முடைய வாழ்க்கையில் சாத்தானை கர்;த்தர் அனுமதிக்கிறார் என்பது நமது சிந்தையில் புகுத்திக்கொள்ளவேண்டிய மற்றொரு சத்தியம். அத்துடன், சத்துருவின் அக்கினி நம்மை ஒருபோதும் சாம்பலாக்கிவிடாது, அனனியா, மீஷாவேல், அசரியா போன்றோர் அக்கினிச் சூளையில் போடப்பட்டபோது, அங்கே அவர்கள் உலாவிக்கொண்டிருந்தார்களே. ஆனால், சத்துருக்கள் நமக்கு விரோதமாகக் கொளுத்தும் அக்கினியோ அவர்களையே எரித்துவிடக்கூடியது; எனவே, இராணுவத்தில் பலசாலியான 

புருஷர்கள் (தானி. 3:20) அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரை கட்டுண்டவர்களாகத் (தானி. 3:21,23) தூக்கிக்கொண்டு  அக்கினிச் சூளையில் போட்டபோது, அக்கினி ஜுவாலையோ தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது (தானி. 3:22); ஆனால், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்களின் கட்டுகளையோ அக்கினி கழற்றிவிட்டது. ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரத்திலே, அவனே தூக்கிப்போடப்பட்டான் (எஸ். 7:9). குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான் (சங் 7:15) என்ற வசனமும், உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள் (நீதி 28:10) என்ற வசனமும் எத்தனை உண்மையானவைகள். நம்மைச் சூழ்ந்து நிற்கும் அக்கினி சத்துருவை எரித்துவிடும்; ஆனால், சத்துருவின் அக்கினிக்குள்ளாகவோ நாம் ஊடுருவி நடந்துசெல்லக்கூடும். இதனையே, 'நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது' (ஏசா. 43:2) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக எடுத்துரைக்கின்றார். 

லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது (ஆதி 19:23) என்ற வசனம், இருளிலிருந்து லோத்து ஒளிக்குள் பிரவேசித்துவிட்டதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றது. நீதிமானாயிருந்தபோதிலும், தவறுதலாகத் தங்கியிருக்கும் ஸ்தானத்திலிருந்து லோத்துவைத் தப்புவிக்கும்படியாக, தானாகவே புறப்பட்டு வந்தார் கர்த்தர். சோதோம் எரிக்கப்படவிருப்பதை லோத்து அறியாதிருந்தபோதிலும், அழிவினைத் தடுக்கும்படியாகவும், அழிவிலிருந்து தான் தப்புவிக்கப்படும்படியாகவும் அவன் வேண்டிக்கொள்ளாதிருந்தபோதிலும் தேவனே தேடிவந்தாரல்லவோ. எரிக்கப்படவிருக்கும் இடத்திலிருந்து எழுந்து, அறிவிக்கப்படும் இடத்தை நோக்கிப் விரைந்து செல்வது மாத்திரமே அவனது பொறுப்பாயிருந்தது. ஒளியின் பிள்ளைகளாக ஒருவேளை காணப்பட்டபோதிலும், வசதிக்காக வசிப்பிடத்தினை இருளுக்குள் மாற்றிக்கொண்ட மனிதர்கள் அநேகர் உண்டு. சோவாரிலே சூரியன் உதித்தபோது, சோதோமையோ அக்கினி எரித்தது. லோத்து ஒளியில் பிரவேசித்தான், சோதோமின் குடிகளோ ஒழிந்துபோனார்கள். நாம் பரலோகில் பிரவேசிக்கும்போது, இப்பூமிக்கும் இதுவே நடக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக