சனி, 9 அக்டோபர், 2021

முந்தியோரின் முறுமுறுப்பு (ஆதி 37:4)

 

 முந்தியோரின் முறுமுறுப்பு



அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். (ஆதி 37:4)


யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான் (ஆதி 37:2); என்றபோதிலும், அவனது சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கச் சென்றிருந்தபோது (ஆதி. 37:12) யோசேப்பு உடன் செல்லவில்லை. சகோதரர்களுடைய துன்மார்க்கத்தை தன் தகப்பனுக்கு யோசேப்பு சொல்லிவந்தபோது (ஆதி. 37:2), அது ரகசியமாகவே இருந்தது; சகோதரர்களைக் குறித்து யோசேப்பு சொன்னதை தகப்பனாகிய யாக்கோபு தன் குமாரர்களிடத்தில் உடனடியாக விசாரிக்கவுமில்லை; யோசேப்பு  சொன்னதாக அவர்களிடத்தில் அறிவித்துவிடவுமில்லை; மாறாக, அவர்களது துன்மார்க்கத்தை மனதில் வைத்துக்கொண்டவனாக, மனந்திரும்புதலுக்காகக் காத்திருந்தான். துன்மார்க்கர்களுக்காக நாமும் ஆண்டவரை நோக்கி செய்யும் ஜெபமும் ரகசியமாகவே காணப்படும்; அது ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் அசையும் உதடுகளின் சத்தம் மாத்திரமே. 

என்றபோதிலும், தகப்பன் செய்துகொடுத்த வெளிப்புறமான பலவருண அங்கியோ (ஆதி. 37:3), யோசேப்பை பிற சகோதரர்களிடமிருந்து பிரித்துக் காட்டியது. பிற குமாரர்களைக் காட்டிலும், யோசேப்பை தங்கள் தகப்பன் அதிகமாக நேசிப்பதை வெளிக்காட்டியது. அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள் (ஆதி 37:4). தகப்பனுக்கும், யோசேப்புக்கும் இடையிலான உறவு, துன்மார்க்கமாக வாழும் சகோதரர்களது உள்ளத்தில் பிரிவினையை உருவாக்கியது. தகப்பன் நேசிக்கும் யோசேப்பை, தாங்களும் நேசிக்க அவர்களுக்கோ மனதில்லை. இன்றும், பிதாவுக்கும் நமக்கும் இடையிலான உறவின் நிமித்தம், விரோதமாக எழும்பி நிற்கும் மனிதர்கள் உண்டு. பிதா நமக்கு உடுத்தியிருக்கும்  இரட்சிப்பின் வஸ்திரமே, பிறரிடமிருந்து நம்மைப் பிரித்துகாட்டவும், வழிவிலகிப் பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டவும் போதுமானது. துன்மார்க்கத்தில் வாழும் மனிதர்களால், பிதாவின் பிள்ளைகளை நேசிப்பது கூடாத காரியமே. சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், சத்தியத்தியத்திற்கு அவர்கள் கீழ்ப்படியாதேபோனால், கத்தியாக அவர்களை சத்துரு உபயோகித்துவிடமுடியும்.  

இளையகுமாரனுக்கு புத்தி தெரிந்தபோது, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குச் சென்றான், தனது பாவத்தை அறிக்கையிட்டான், அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். உயர்ந்த வஸ்திரத்தை உடுத்தி, மோதிரத்தை அணிவித்து, பாதரட்சையையும் கொடுத்ததுடன், கொழுத்த கன்றை அடித்து சந்தோஷமடைந்தான் (லூக். 15:18,20-24). இழந்துபோன இளையகுமாரனடைய உறவு மீண்டும் கிடைத்துவிட்டது என்று ஒருபுறம் தகப்பன் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க, மறுபுறமோ, மூத்த குமாரன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான் (லூக் 15:28). பிற மனிதர்களுக்கும் பிதாவுக்கும் இடையில் உண்டாயிருக்கும் உறவோ, அந்த உறவினால் அவர்களுக்குக் கிடைக்கும் மேன்மையோ, நம்முடைய வாழ்க்கையை பிதாவின் வீட்டை விட்டு வெளியேற்றிவிடக்கூடாது. ஆவிக்குரிய பயணத்தில் முதிர்ந்தவர்களாயிருந்தாலும், பிதாவுக்கும் நமக்கும் இருக்கும் உறவினை முறித்துப்போட சத்துரு எப்பொழுதும் ஆயத்தமாகவே இருப்பான்; எனவே, எச்சரிக்கையோடிருப்போம். 

அவ்வாறே, முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.  வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:  பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள் (மத் 20:10-12). முந்தி வந்தவர்களிடத்தில் இத்தகைய முறுமுறுப்பினை சத்துரு உருவாக்கி, பிந்தி வந்தவர்களைப் பகைக்கத் தூண்டிவிடாதபடி எச்சரிக்கையோடிருப்போம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக