செவ்வாய், 12 அக்டோபர், 2021

எல்லைக்கு உள்ளே (ஆதி 26:1,2

எல்லைக்கு உள்ளே



ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.  கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு (ஆதி 26:1,2) என்றார். 



அழைக்கப்பட்ட இடத்தின் அஸ்திபாரங்களிலிருந்து நம்மை அசைக்க முற்படும் காரியங்களை அடையாளம் கண்டுகொண்டால், ஆண்டவர் வரைந்திருக்கும் எல்லையிலிருந்து நம்முடைய கால்கள் வெளியேறிவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ள முடியும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கே முதலிடம் கொடுத்தால், முன்னேறிச் செல்லவேண்டிய பாதைகளுக்கு நம்முடைய பாதங்கள் முரண்பட்டுவிடக்கூடும். பிரச்சனைகளையே முதலாவது பார்ப்பவர்களுக்கு, பிரச்சனைகளே பெரியதாகத் தென்படும்; ஆனால், பிரச்சனைகளின் மத்தியிலும் பிதாவையே நோக்கிப் பார்ப்பவர்களின் கண்களுக்கோ பிரச்சனைகள் சிறியதாகத் தோற்றமளிக்கும். 

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் (யோவா 16:33) இயேசு கிறிஸ்து. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (1கொரி 15:55) என்று எழுதும் பவுல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி 15:57) என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லையே. போராட்டங்களே இல்லாத வாழ்க்கை வேண்டுமென்று விரும்புவோர், ஓடுகளத்தின் வெளியிலிருந்து கரஒலி எழுப்பலாம்; ஆனால், வெற்றிமேடையில் வீரர்களாக அறிவிக்கப்படுவது இயலாதது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2தீமோ 4:7) என்று பவுலைப்போல நாமும் கூறவேண்டுமே. 

சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் (வெளி 2:8-10) என்று வாசிக்கின்றோமே. 'பாடுகள் பத்துநாள் மாத்திரமே' என்றாலும், முழு வாழ்க்கையையும் அது மூடிவிட்டதைப் போன்ற உண்டாகிவிட்டால், பத்து நாளுக்குள் நாம் பாதை மாறிச் சென்றுவிடுவோம். 

அப்போஸ்தலனாகிய பேதுருவும், இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள் (1பேது 1:6) என்றும், கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக; அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1பேது 5:10,11) என்றே எழுதுகின்றார். மேலும், எபிரேய ஆக்கியோனும், அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார் (எபி 12:10) என்றே சிட்சையில் கால அளவைச் சுட்டிக்காட்டுகின்றார். உபத்திரங்களின் வழியாக நாம் பிசாசினுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்துவிடவேண்டும் என்று பிசாசு விரும்புகின்றான்; ஆனால் வேதமோ, 'நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்றே' (அப் 14:22) நமக்குப் போதிக்கிறது. 

தேசத்தில் பஞ்சம்  வந்தபோது, ஈசாக்கின் பாதங்களோ, ஆகாரம் இருக்கும் பெலிஸ்தருடைய தேசத்தை நோக்கிச் சென்றது. உபத்திரவங்களின் மத்தியிலும், அவர் விரும்பும் இடத்திலேயே குடியிருந்தால், அவர் கூடவே இருப்பார். பத்து நாளுக்காக பரலோகத்தை இழந்துவிடக்கூடாது. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக