இன்னும் யார் இருக்கிறார்கள்?
பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். (ஆதி 19:12,13)
நம்முடைய ஜீவனுக்கே நாம் பயந்துகொண்டிருந்தால், பிறரது ஜீவனை பாதுகாக்க நம்மால் முடியாது. 'இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்?' என்ற கேள்வி நீதிமானாகிய லோத்துவிற்கு முன் வைக்கப்பட்டபோது, தனது மகள்களுக்கு நிர்ணயித்திருந்த மருமக்கள்மார்களைத் தப்புவிப்பதற்கு மாத்திரமே அவன் முயற்சிக்கிறான்; அவர்களிடத்தில் மாத்திரமே சென்று பேசுகிறான்; சோதோமில் தான் வாழத்தொடங்கின நாளிலிருந்து, ஒருவரைக் கூட காப்பாற்றும் நிலைக்கு அவன் ஆசைப்படவில்லை. லோத்து 'தன்னை நீதிமானாகக் காத்துக்கொண்டான்' என்பது உண்மைதான்; என்றாலும், நீதியின் பாதைக்கு சோதோமின் மனுஷர் எவரையும் அவனது வாழ்க்கை ஆயத்தப்படுத்தவில்லை. தங்களுடைய வாழ்க்கையின் வசதிகளை மட்டுமே மனதிற்கொண்டு, வாழுமிடத்தைத் தெரிந்துகொள்ளும் மனிதர்கள்; பிறரது பாவமான வாழ்க்கையினால் வாதிக்கப்படலாம்; ஆனால், தங்களது பரிசுத்தமான வாழ்க்கையினால் பிறரைப் பாதிப்பதுகூட கடினமானதே. லோத்து ஆபிரகாமை விட்டுப் பிரியும்போது, 'தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, சரீரத்திற்குச் சாதகமாயிருக்கும் செழிப்பான சமபூமியைத் தெரிந்துகொண்டான்' (ஆதி. 13:10); ஆனால், அக்கிரமத்தினால் வனாந்தரமாகக் காணப்படும் வாழ்க்கையிலிருந்து சோதோமின் மக்களை அவனால் காப்பாற்ற இயலவில்லை.
ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லைதான்; எனினும், நீதியைப் பிரசங்கித்தான் நோவா (2 பேதுரு 2:5); ஆனால், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பை யோனா அறிவித்தபோதோ, நினிவேயின் மக்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை, ராஜாவும்கூட இரட்டுடுத்தி சாம்பலிலே உட்கார்ந்து மனந்திரும்பினார்கள் (யோனா 3:5,6); 'நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க' (2பேது 2:8) என்று லோத்துவை வேதம் அறிமுகப்படுத்தினாலும், தன்னையும், தன் வீட்டிலிருக்கும் விருந்தினர்களையும் அக்கிரமம் அண்டிவிடாதபடி லோத்து காத்துக்கொண்டான்; எனினும், அழிக்கப்படக்கூடிய நிலையிலிருந்த சோதோமின் மக்களுக்காக லோத்து என்ன செய்தான்? என்பது கேள்விக்குரியே! 'ஜனங்கள் வளைந்துகொடுத்தால், விளையச் செய்கிறவர் கர்த்தர்; என்றாலும், அறிவிக்கவேண்டிய கடமையிலிருந்து நாம் பின்வாங்கிவிடக்கூடாது.' பாவம் நம்மை அண்டாதபடி நம்மை நாம் காத்துக்கொள்ளக்கூடும்; என்றாலும், பாவிகளின் இரட்சிப்பிற்காக நாம் என்ன செய்கிறோம் என்பது நம்மிடத்தில் கேட்கப்படவிருக்கும் கேள்வி.
வருகையில் நிச்சயம் நம்மைத் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்; எனினும், வீதியிலே விடப்படும் மனிதர்களின் நிலை என்னவாகும்? அதற்கு முன், இருக்கும் இடத்தில் அவரை அறிவித்துவிட நாம் முயற்சிப்போம், இரட்சிப்பு பிறருக்கும் உரியதாகட்டும். வாழும் நாட்களிலேயே, ஆத்துமாக்களை உலகத்தில் நாம் ஆதாயப்படுத்திவைத்திருப்போமென்றால், வருகையின் நாட்களில் நம்முடையவர்களை நாம் அடையாளம் காட்டாமல் அவரே தன்னுடன் சேர்த்துக்கொள்ளுவார். உலகத்தில் நீதிமான்களோடு ஒட்டிக்கொண்டு ஓட முயற்சிக்கலாம்; ஆனால், வருகையோ துன்மார்க்கர்களை நீதிமானினின்று பிரித்துவிடும்.
'கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்,' அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங் 127:1) என்ற வசனத்தை, 'உலக வீட்டைக் கட்டுவதோடு மாத்திரமே' ஒப்பிட்டுப் பார்த்துவிட்டோம்; ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ;டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும் (1கொரி 3:15) என்ற நிலையை அறிவிக்காவிடில் நாமே வருகையில் அனுபவிக்கவேண்டியதாகிவிடும். பட்டணத்து வாசலில் உட்கார்;ந்திருந்தாலும், பட்டணத்தை விட்டுதான் ஓடவேண்டும். 'இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்?' என்ற கேள்வி 'இவ்விடத்தில் இன்னும் எனக்கு யார் இருக்கிறார்கள்' என்று மாறட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக