புதன், 13 அக்டோபர், 2021

பயமும், பயணமும் (ஆதி 33:17)

 பயமும், பயணமும்



யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.(ஆதி 33:17)


நாம் இருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பது உண்மையே; என்றபோதிலும், அழைத்த இடத்தைச் சென்றடைவது அதைவிட முக்கியம்.  ஏசா மற்றும் யாக்கோபு ஆகியோரின் சந்திப்பு சமாதானமாக நடைந்தபோதிலும், ஏசாவுடன் யாக்கோபு சேர்ந்து பிரயாணப்படவில்லை. என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் (ஆதி 33:14) என்று ஏசாவினிடத்தில் யாக்கோபு சொன்னபோதிலும், ஏசா தன்னைவிட்டு விலகி, வந்தவழியே சேயீருக்குப் திரும்பிப் போனபோது, சேயீரை நோக்கி யாக்கோபு பயணப்படவில்லை; மாறாக, கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டதோடு, தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தை சீகேமின் தகப்பனாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கினான் (ஆதி 33:18,19). அங்கே தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான் (ஆதி 33:17). சேயீருக்கு வருகிறேன் என்று சொல்லியும், சுக்கோத்தில் தங்கிவிட்டதற்கு, யாக்கோபின் உள்ளத்தின் ஓரத்தில் ஏசாவைக் குறித்து இருந்த பயமே காரணமாயிருந்திருக்கக்கூடும்.   

ஒருபுறம் சேயீரில் யாக்கோபின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்திருககும் ஏசா. மற்றொருபுறம். கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் (ஆதி 31:3) என்று சொல்லியே யாக்கோபை லாபானுடைய வீட்டிலிருந்து புறப்படச் செய்தததினால், தொடரவேண்டிய பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கர்;த்தர். சேயீருக்கு தன்னுடைய வீட்டிற்கு வராததினால், இந்தமுறையும் யாக்கோபு தன்னை ஏமாற்றிவிட்டதைப் போலவே ஏசா உணர்ந்திருக்கக்கூடும். அப்படியே,  தனக்கு வீட்டையும், மிருகஜீவன்களுக்குக் கொட்டாரத்தையும் போட்டதோடு மாத்திரமல்லாமல், ஆண்டவருக்கென்று அங்கே ஒரு பலிபீடத்தையும் கட்டி, அதற்கு ஏல்எல்லோக்கே இஸ்ரவேல் என்று பேரிட்டு (ஆதி. 33:20), நிரந்தரமாக அங்கே தங்கிவிட யாக்கோபு முயன்றபோது, போகவேண்டிய இடத்தை விட்டுவிட்டு வழியிலேயே யாக்கோபு தங்கிவிடுவானோ என்ற நினைவோடு, தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு (ஆதி 35:1) என்று கூறுகின்றார். 

  நாமும் சில வேளைகளில் யாக்கோபைப் போலவே செயல்பட்டுவிடுகின்றோம். போக அவசியமில்லாத இடத்திற்கு, பலவிதமான காரணங்களைச் சொல்லி, போகாமல் இருந்துவிடுகின்றோம்; ஆனால் அதே நேரத்தில், போகவேண்டிய இடத்தையும், பயணத்தையும் மறந்துவிடுகின்றோம். கர்த்தர் அழைத்த இடத்தை விட்டு விட்டு, நமக்கு வசதியான இடத்தில் வாழ்ந்துகொண்டு, கர்த்தரை திருப்திப்படுத்த விரும்புகிறோம்.

எலியாவின்  வாழ்க்கையிலும் நடந்தது இதுவே, யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னதை (1இரா 19:2) எலியா கேட்டபோது, பயம் எலியாவைச் சூழ்ந்துகொண்டது. அந்த பயத்தினாலே தொடரவேண்டிய பிரயாணமும் நின்றுபோய்விட்டது. பிராணனைக் காக்க பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனான். வனாந்திரத்திற்குச் சென்று தான் சாகவேண்டும் என்று வேண்டினான்.  நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் (1இரா 19:7) என்று தூதன் சொன்னபோதிலும், கெபிக்குள் போய் தங்கிவிட்டான். 'எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்?' (1 இராஜா 19:9) என்ற கர்த்தருடைய வார்த்தை உண்டானபோதிலும், பிராணனைக் குறித்த பயம் அவனது பயணத்தை நிறுத்திவிட்டதே. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக