வழக்காகும் விண்ணப்பம்
தனக்குத் தேவை என்பதினால் அல்ல, அடுத்தவர்களுக்கு இருக்கிறது என்ற பொறாமையினால், விண்ணப்பம் என்ற போர்வையில் தேவனோடு போராடிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். ஆவிக்குரியவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பலரது வாழ்க்கையிலும் இத்தகைய அநீதியினை அகத்திலே சத்துரு நுழைத்துவிடுகிறான். ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் (ஆதி 30:1) என்று கோபத்துடன் பேசினாள். ராகேலின் உதடுகள் கணவனுக்கும் அவளுக்கும் இடையிலான உறவைக்கூட உடைத்துவிடும் அளவிற்கு வார்த்தைகளை உச்சரித்தன. காரணத்தை கணவன் மேல் சுமத்தி, கர்ப்பம் அடைபட்டிருப்பதையோ காணக்கூடாதவளாயிருந்தாள் ராகேல்; அத்துடன், உடன்பிறந்த சகோதரியாகிய லேயாளோடு போராடும் நிலைக்கும் தன்னைத் தள்ளிக்கொண்டாள். மேலும், தேவனோடு தான் செய்யும் விண்ணப்பத்தை வழக்காக மாற்றி, உடன்பிறந்த சகோதரியையே எதிரியாக நிறுத்திவிட்டாள் ராகேல்.
பிள்ளையற்றிருந்த ராகேல், யாக்கோபுக்கு தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான். பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றபோது, தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்றே சொல்லுகிறாள் ராகேல் (ஆதி 30:4-6). மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றபோது, நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்றே கூறுகின்றாள் (ஆதி 30:7,8). சகோதரியை மேற்கொள்ளுவதற்காக தேவனை பயன்படுத்த முயற்சித்தவள் ராகேல். சகோதரிக்குக் கொடுக்கப்படுவதை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ள மனதில்லாதவள். தேவனிடம் சகோதரி வாங்கிக்கொண்டிருப்பதையெல்லாம், ராகேல் வழக்காக்கிக்கொண்டிருந்தாள்.
இன்றும் இப்படிப்பட்ட நிலைக்குத் தங்களைத் தள்ளிக்கொண்ட மனிதர்கள் உண்டே. நல்ல பதவியில், நிறைவான வாழ்வாதாரங்களோடு பிறர் வாழ்வதைக் காணும்போது, பொறாமையினால் அவர்களிடமிருந்து தங்களைத் தூரமாக்கிக்கொண்டு, பாசம் என்றும் கயிற்றை அறுத்து, பிரிவினை என்னும் வேரை வளரவிட்டு, உடன்பிறந்த சகோதரர்களையே, சகோதரிகளையே, குடும்பத்தைச் சார்ந்தவர்களையே சத்துருக்களாகப் பாவித்து, குணமாறுதலுக்குள் குடிபோய்விடும் மக்கள் அநேகர். 'கண்ட சகோதரனிடத்தில் இடைவெளியோடு வாழ்ந்துகொண்டு, இடைவிடாமல் ஜெபிப்பதினால் பிரயோஜனம் என்ன?' முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:24) என்பதல்லவோ மனிதனது வாழ்க்கைக்கென்று வகுக்கப்பட்ட தேவனது சூத்திரம். தன்னிடத்தில் காணப்படும் குறைகளைக் காணுவதற்குப் பெலன் இல்லாமலும், அதைச் சுட்டிக்காட்டும் மனிதர்களின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமலும், மனிதர்களுடன் போராடுவதையே தங்கள் பணியாக்கிக்கொண்டவர்கள் அநேகர். 'பொறாமை என்னும் எலும்புறுக்கியினால்' (நீதி. 14:30) தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்பவர்கள் இவர்கள். சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு ஈடாகவோ அல்லது அவர்களைக் காட்டிலும் ஒருபடி மேலாகவோ ஆசீர்வாதங்களைப் பெற்றுவிடவேண்டும் என்ற பித்தங்கொண்டவர்கள். இத்தகையோரின் தவறான நோக்கம், தவறான திசையினை நோக்கியே நித்தம் இவர்களைப் பயணிக்கச் செய்யும். 'பெற்றுக்கொள்ளவேண்டும்' என்பதற்காக 'புற்றுக்குள்ளிருக்கும் பாம்புக்கும்' தங்களை விட்டுக்கொடுத்துவிடுபவர்கள் இவர்கள். நேர்மையை விட்டு விலகி, தங்கள் வழிகளைத் தாங்களே கோணலாக்கிக்கொள்பவர்கள். தங்கள் கைகள் கறையாவதைக் குறித்து கவலை கொள்ளாமல், நிறைவானால் போதும் என நிம்மதி பெருமூச்சு விடுபவர்கள்.
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திறவர் (பிர 3:11), தன்னுடைய வேளை வரும்படியாகக் காத்திருக்கிறவர் (யோவான் 2:4; 7:6,8,30; 8:20); என்றபோதிலும், வேளைக்கு முன் வேண்டும் என்ற மனநிலையோடு, காத்திருக்க மனதில்லாமல், சத்துரு திறந்துவைத்திருக்கும் கதவிற்குள் காலடி எடுத்துவைத்துவிடாதபடி நாம் எச்சரிக்கையோடிருக்கவேண்டும். நாம் எதிர்பார்க்கும் காரியங்கள், நாம் எதிர்பார்க்கும் வேளைக்குள் நடந்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் நாம் நம்மை நிறுத்திவிடமுடியாது; தேவனையும் அத்தகைய நோக்கத்தோடு அணுகிவிடமுடியாது.
நம்முடைய போராடும் மனநிலை, பிறரையும் போராளியாக மாற்றிவிடும். தேவன் தன்னை ஆசீர்வதித்திருந்தபோதிலும், தன்னோடு போராடிக்கொண்டிருக்கிற ராகேலைப் பார்த்ததும், தானும் போராடவேண்டும் என்ற மனநிலை லேயாளின் உள்ளத்திலும் உண்டானது. ராகேலுடைய போராடும் மனநிலையே லேயாளையும் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது. ராகேலைப்போல, லேயாளும் வேலைக்காரியை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். வேலைக்காரியாகிய சில்பாள், காத், ஆசேர் என்னும் குமாரர்களைப் பெற்றெடுத்தபோதிலும், லேயாளோ, 'நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்' (ஆதி. 30:13) என்றே கூறுகின்றாள். லேயாளின் குணம் ராகேலைப் போல மாறிவிட்டதே! ராகேலும் இப்படித்தானே சொன்னாள், தன் வேலைக்காரியாகிய பில்கால் ஒரு குமாரனைப் பெற்றபோது, 'தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்றல்லவோ சொன்னாள் (ஆதி 30:6). யாரோ ஒருவர் சுமந்து, வேதனையோடு பெற்றெடுத்த பிள்ளையை 'என்னுடைய பிள்ளை' என்று சொல்லும் நிலைக்கு ராகேலைப் போல லேயாளும் தன்னைத் தள்ளிக்கொண்டாளே. 'வித்து கணவனுடையது என்றாலும், வேதனையோ வேலைக்காரியினுடையதாயிற்றே.' 'நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்' (ஆதி 3:16) என்றல்லவோ ஏவாளிடத்தில் சொன்னார் ஆண்டவர்; இந்த வேதனை என்றும் பங்கை ராகேலும், லேயாளும் தங்கள் தங்கள் வேலைக்காரிகளுக்குக் கொடுத்துவிட்டனரே.நாம் சந்தோஷத்தை அடையவேண்டும் என்பதற்காக, வேறொருவரை வேதனைக்குள் தள்ளிவிடக்கூடாது. மற்றவர்களை முட்களின் மீது நடக்கச் செய்து, நமது முதுகையோ மெத்தையின் மீது கிடத்திவிடக்கூடாது.
லேயாள் பெற்ற குமாரனாகிய ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தபோது, ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள். அதற்கு லேயாள், நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்று சொன்னாள்; என்றபோதிலும், 'உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும்' (ஆதி 30:14,15) என்று ராகேல் சொன்னபோதோ, லேயாள் அதற்குச் சம்மதித்துவிட்டாள். ராகேல் தூதாயீம் கனிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாள்; ஆனால், லேயாளோ, பிள்ளைபேறு நின்றபோதிலும், கணவனுடனான உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாள். யாக்கோபு ராகேலைதான் நேசித்தான், மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் (ஆதி 29:21) என்றுதான் ராகேலைத்தான் கேட்டான். அப்பொழுதே யாக்கோபு ராகேலை மனைவி என்ற நிலையிலேயே பார்த்தான். என்றாலும், தகப்பனோ இரவிலே லேயாளை அழைத்துக்கொண்டு யாக்கோபினிடத்தில் விட்டதினால், லேயாள் யாக்கோபுக்கு மனைவியானாள். எனினும், 'என் புருஷன்' (ஆதி. 30:15) என்ற உரிமையே அவளது உள்ளத்தை நிறைத்திருந்தது.
லேயாளைக் குறித்து, மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று (ஆதி 29:35) என்றும், லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள் (ஆதி. 30:9) என்றும் வாசிக்கின்றோமே. என்றபோதிலும், தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள் (ஆதி 30:17). அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள் (ஆதி 30:19).
தூதாயீம் கனியை (அயனெசயமநள) ராகேல் வாங்கிச் சென்றபோதிலும், கர்ப்பத்தின் கனியை (கசரவை ழக றழஅடி) (சங். 127:3) லேயாளுக்குக் கொடுத்தார் கர்த்தர். பிள்ளைபேறு லேயாளுக்கு நின்றுபோயிற்று, புருஷனிடத்தில் பிரவேசிப்பதினால் இனி அவளுக்குப்; பிள்ளைகள் பிறக்கப்போவதில்லை என்று ஒருவேளை ராகேல் எண்ணியிருக்கக்கூடும். எனினும், மீண்டும் லேயாளின் கர்ப்பத்தின் கதவு திறக்கப்பட்டபோது, ராகேலை அது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். அடைக்கப்பட்டிருந்த லேயாளின் கர்ப்பம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும்போது, என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இன்னும் அடைபட்டிருப்பது ஏன்? என்ற கேள்வி ராகேலின் உள்ளத்தில் எழும்பியிருக்கக்கூடும். எவருடைய வாழ்க்கையையும் 'முடிந்தது' என்று நாம் நினைத்துவிடமுடியாது; தேவன் உடனிருந்தால், எப்போது வேண்டுமானாலும் 'முளைவிடலாம்.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக