புதன், 13 அக்டோபர், 2021

செயலிழந்த சந்ததி (ஆதி. 35:2)

 செயலிழந்த சந்ததி



தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு (ஆதி 35:1) என்று சொன்னபோது, யாக்கோபோடுகூட இருந்த ஜனங்கள், மூன்று காரியங்களைச் செய்தார்கள். முதலாவது, தங்களிடத்திலிருந்த அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டார்கள், இரண்டாவதாக தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள், மூன்றாவதாக வஸ்திரங்களை மாற்றினார்கள். (ஆதி. 35:2) 


அந்நிய தெய்வங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; அந்த அருவருப்பு அதனை வைத்திருந்தவர்களையும் அசுத்தமாக்கியிருந்தது. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள் (சங் 115:4-8; சங். 135:15-18). விக்கிரகங்களால் ஒன்றும் செய்ய இயலாது; எனினும், அவைகளை வணங்குகின்ற மனிதர்களையோ  அது தன்னைப்போலவே மாற்றிவிடுகின்றது.  விக்கிரகங்களை வணங்குகிறவர்களை மாத்திரமல்ல, விக்கிரக வணக்கத்திற்குட்பட்டவர்களோடு உண்டாகும் தொடர்பும் நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துவிடக்கூடும். விக்கிரகம் போன்ற செயலற்ற நிலையில் வாழும் மனிதர்கள், உங்களையும் செயலற்ற நிலைக்குத் தள்ளிவிடக்கூடும். (1இராஜா. 11:3) 

உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது: அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன் (எரே. 2:34) என்று சொல்லுமளவிற்கு, அசுத்தம் அநேகருடைய வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட மனிதர்களையே, மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார் (எசே 12:2) என்று எசேக்கியேலுக்குச் சுட்டிக்காட்டுகின்றார் ஆண்டவர். கர்த்தரை அறியாதவர்களின் கண்களை காரிருளே மூடியிருக்கும்.

இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள் என்றும், கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி (ரோம 11:7,8) இருதயத்தைக் கடினப்படுவதினால் கண்கள் இருளடைந்துவிடுகின்றது.  ராஜ்யத்தின் சுவிசேஷம் சொல்லப்படும்போது விசுவாசியாதவர்களின் கண்களும் இருளடைந்துவிடுகின்றது (யோவான் 12:39,40), சுவிசேஷத்தை விசுவாசியாதபடி தங்கள் காதுகளை அடைத்துக்கொள்ளுவார்களென்றால், ரகசியத்தைக் கேட்காதபடி, அத்தகையோரின் கண்களையும், காதுகளையும் கர்த்தர் அடைத்துப்போடுவார். (மாற். 4:12) 

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தபோது, அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டபோது, இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? (மாற் 8:15-18) என்று சொன்னாரே. ஆவிக்குரியவர்களாயிருந்தும், 'இருதயத்தில் கடினமிருந்தால்' சத்தியத்தின் சத்தம் சரியாகக் கேட்காதபடி நமது செவிகள் மந்தமாகிவிடும், பார்வையும் பறிபோய்விடும் உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். (மத் 13:16)


ஆலயமும், அலங்காரமும் (ஆதி 35:2)

 ஆலயமும், அலங்காரமும்



அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். (ஆதி 35:2)


நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) என்று எழுதுகின்றார் பவுல். சத்துருவின் வழிகளில் நாம் நடந்தாலோ, விழிகளால் சத்துருவின் வழிகளை நாம்; பார்த்துக்கொண்டேயிருந்தாலோ, கழிவுகள் நமது கால்களில் ஒட்டிக்கொள்ளக்கூடும்.  நேர்மையான நமது வாழ்க்கையில், கோணலான குணத்தை அது விதைத்துவிடும். யாக்கோபுடன் பயணித்த மனிதர்களின் வாழ்வில் நடந்தது இதுவே. 

சுக்கோத்தில் யாக்கோபு தங்கியிருந்தபோது, ஆண்டவரை அறியாத சீகேம் மனிதர்களின் பழக்கவழக்கங்கள், வழிபாடுகள் யாக்கோபின் மனிதர்களையும் பற்றிக்கொண்டது. அவர்களுடைய ஆடைகளில், ஆபரணங்களில், காதணிகளில் என அனைத்திலும் அது பிரதிபலித்தது. நேசித்த மனைவியாகிய ராகேல் தன் தகப்பனாகிய லாபானின் தெய்வங்களைத் திருடிக்கொண்டுவந்திருந்தபோது (ஆதி. 31:32), லாபான் யாக்கோபின் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், வேறு எந்த சுரூபங்களையும் கண்டுபிடிக்கவில்லை 

(ஆதி. 31:34,35); அப்படியென்றால், யாக்கோபின் மனிதர்களிடத்தில் காணப்பட்ட இந்த அந்நிய தெய்வங்கள் எங்கிருந்து வந்தன? வழிகளில் விழிகளில் பட்டவைகளையெல்லாம் யாக்கோபின் மனிதர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்ததினாலேயே. மேலும், 'உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு' என்று யாக்கோபு கூறும் வார்த்தைகள், அவன் அதனை அறிந்திருந்ததையே சுட்டிக்காட்டுகின்றது.  

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்று யாக்கோபு சொன்னபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும் கொடுத்ததோடு, தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான் (ஆதி. 35:3,4). அந்நிய தெய்வங்களைப் புதைத்தது சரி; எனினும், காதணிகளையும் கழற்றி புதைத்தது ஏன்?

காதணிகளை அணிந்துகொள்வது தவறல்லவே; விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாம், தன் மகனாகிய ஈசாக்கிற்குப் பெண் பார்க்கும்படியாக தன்னுடைய ஊழியக்காரனை அனுப்பியபோது, சகலவிதமான உச்சிதமான பொருட்களைக் கொடுத்து அனுப்பியதோடு (ஆதி. 24:10), காதுகளில் அணிய காதணியையும், கைகளில் அணிய கடகங்களையும் (ஆதி. 24:30) கொடுத்து அனுப்பினானே. மேலும், மேலும், மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கை கொண்டுவந்து செலுத்துங்கள் (யாத். 35:4,5) என்று சொன்னபோது, மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான் (யாத் 35:22) என்றும் வாசிக்கின்றோமே. 

இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையில், காதணிகள் கன்றுக்குட்டியானது. எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் அந்தப் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள் (யாத். 32:3,4). ஆனால், யாக்கோபின் மனிதர்களோ, அந்நிய தெய்வங்களுக்கடுத்தவைகளை வழிகளிலே வாங்கி அவைகளை காதணிகளாக அணிந்திருந்திருக்கக்கூடும் (உபா. 7:25; நியா.8:26) எனவே, கர்த்தருக்கு அருவருப்பான அவைகள் கழற்றப்பட்டு கர்வாலி மரத்தடியிலே புதைக்கப்பட்டன. ஆலயமான ஜனங்களுக்குள் அந்நிய தெய்வங்கள் வந்ததால், அலங்காரமாக அவைகளின் ஆபரணங்களும் வந்துவிட்டது. நம்முடைய வாழ்க்கையிலும், உள்ளத்தில் அந்நிய தெய்வமிருந்தால், உடலிலும் அவைகளின் அலங்காரமே தென்படும். புதைக்கவேண்டியவைகளோடு நாம் புறப்பட்டுச் சென்றுவிடக்கூடாது.

இன்றும் இப்படிப்பட்ட நிலை காணப்படுகின்றதே. கைகளிலும், காதுகளில் என்ன அணிகிறோம் என்று அறியாமலேயே, அந்தகாரத்தின் ஆளுகைக்குள் சிக்கிக்கொள்ளும் மக்கள் உண்டே.  சத்துருவின் முகத்தைக் காட்டும் வஸ்திரங்களும், ஆபரணங்களும், சிகை அலங்காரங்களும் நாகரீகம் என்ற பெயரில் ஜனங்களுக்குள் நுழைந்துவிட்டதே. சரீரமாகிய ஆலயத்தை சத்துருவின் ஆபரணங்களால் அலங்கரிக்காதபடி எச்சரிக்கையாயிருப்போம்.


கோபம், சாபம், சமூகம் (ஆதி 35:1)

 கோபம், சாபம், சமூகம்



தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.(ஆதி 35:1)


ஆஸ்திகள் திரளாய் இருந்தாலும், ஆபத்து நேரத்தில் காக்கப்படவேண்டியது ஆத்துமாவே. ஆஸ்தியைக் காக்க ஆத்துமாவை இழந்துபோனவர்களும், ஆஸ்தியோடே துசியாக அடித்துச்செல்லப்பட்டுவிட்டவர்களும் அநேகர். சுக்கோத்திலே யாக்கோபு சுகமாய் தங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பாசமாய் வளர்த்த மகள் தீனாளைப் பறிகொடுக்கும் நிலை உருவானது. யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து, மிகவும் கோபங்கொண்டார்கள் (ஆதி 34:7). அதுமாத்திரமல்ல, பட்டணத்தை அழித்துவிடவும் ஆயத்தமாகிவிட்டார்கள். 

எதிரியின் பெலத்தையும், பெருக்கத்தையும் பார்த்து சிமியோனும், லேவியும் பின்வாங்கிவிடவில்லை. 'தங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போல நடத்திவிட்டார்களே' (ஆதி. 34:31) என்ற வேட்கையில் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள். பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டு, பட்டணத்தைக் கொள்ளையிட்டு, ஆடுமாடுகளையும்,  கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும், அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைப்பிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். அத்துடன், ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் (ஆதி 34:26-29). நம்முடைய வாழ்க்கையிலோ, எதிரியின் பெலம் நமது கண்ணில் படும்போது, சில நேரங்களில் அது நம்மை பின்வாங்கச் செய்துவிடுகின்றதே. 

எனினும், தனது குமாரர்கள் செய்த இக்காரியத்தை, யாக்கோபினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பகையை நினைத்து நினைத்து பயப்பட்டுக்கொண்டிருப்பதே யாக்கோபின் பழக்கமாயிருந்தது. லாபானின் கைகளுக்குத் தப்பி, ஏசாவின் கைகளுக்குத் தப்பி, இப்பொழுதோ இவர்களின் கைகளில் எல்லாவற்றையும் இழந்துபோய்விடும் நிலை உண்டாகிவிடுமோ என்று யாக்கோபு பயந்திருக்கக்கூடும். எனவே, யாக்கோபு தன் குமாரர்களாகிய சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றும், கூறுகின்றான் (ஆதி 34:30). யாக்கோபின் இந்த வார்த்தைகள், அவன் தொடர்ந்து சுக்கோத்திலேயே இருந்துவிட தீர்மானித்திருந்தான் என்பதையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலையிலேயே, தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போ என்றார் (ஆதி 35:1). 

எனினும், எதிரிகளை நினைத்து யாக்கோபு பயந்தது மாத்திரமல்ல, தன்னுடைய குமாரரையே சபிக்கும்படியாகவும் அது அவனைத் தள்ளிற்றே. யாக்கோபின் கோபம் குமாரர்கள் மேல் திரும்பிற்றே. சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன் (ஆதி 49:5-7) என்றல்லவோ கூறினான். 

எனினும், யாக்கோபு பிரயாணப்பட்டபோது, அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள் (ஆதி. 35:5). நம்முடைய வாழ்க்கையிலும் பிரயாணத்தைத் தொடங்கினால், பயங்கள் நம்மை விட்டுப் பிரிந்துபோய்விடும். பெத்தேலுக்கு யாக்கோபு வந்தபோது, அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான் (ஆதி 35:5-7). சகோதரனால் உண்டாகும் ஆபத்தோ, சத்துருவினால் உண்டாகும் ஆபத்தோ, நாம் வந்துசேரவேண்டிய இடம் ஆண்டவருடைய சமூகமே.


வேலி (ஆதி 34:2)

 வேலி



அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். (ஆதி 34:2)


தன்னைத்தானே கட்டுப்படுத்த இயலாத மனிதன், தான் கெட்டுப்போவ தோடு மற்றவர்களுடைய வாழ்க்கையையும் கெடுத்துப்போடுவது நிச்சயம். சீகேமின் வாழ்க்கை இதற்கு ஓர் உதாரணம். யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாளைக் கண்டதும், அவளது அழகில் மயங்கி, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத சீகேம், அவளை தனது வசிப்பிடத்திற்கும் அழைத்துச் சென்று, அவளோடு சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தி, அவளை தன்னோடு கூடவே வைத்துக்கொண்டு, அவளது வாழ்க்கையையே கெடுத்துப்போட்டான். மேலும், தீட்டுப்படுத்தினதற்குப் பின்னரே, வீட்டிற்குத் தன் தகப்பனிடத்திற்குத் தீனாள் தனக்கு வேண்டும் என்று சொல்லியனுப்புகின்றான் சீகேம் (ஆதி. 34:4). அதுவும், தானாகச் சென்று சொல்லவில்லை; தகப்பனாயிருந்தபோதிலும் தனது நண்பர்கள் மூலமாகவே தகவல் அனுப்பினான் சீகேம் என்பதே வரலாறு. இன்றைக்கும் அநேக வாலிபர்களுடைய நிலமை இதுவே; கறையான கண்களோடு பெண்களைக் காண்பது மாத்திரமல்ல, பெண்ணுடைய சரீரத்தையும், தன்னுடைய சரீரத்தையும் தீட்டுப்படுத்தி, தொட்டதற்குப் பின்னும், கெட்டதற்குப் பின்னுமே, தாய் தகப்பனிடத்தில் கேட்டனுப்புவது பல வாலிபர்களுடைய வாழ்க்கையில் வழக்கமாகிவிட்டது. தீனாள், தன் தகப்பனுடைய வேலிக்குள் இருந்தும், அவளை அசுத்தப்படுத்தினவன் சீகேம். அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிர 10:8) என்ற நிலை சீகேமின் வாழ்க்கையில் உண்டாகிவிட்டதே. (ஆதி. 34:25) 

  தன்னைத் தானே கட்டுப்படுத்த இயலாத, பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாரின் மனைவி, நித்தம் நித்தம் யோசேப்போடே பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லையே (ஆதி 39:10). கணவனின் வேலிக்குள்ளேயே அவளுடைய வாழ்க்கை இருக்கிறது என்பதை அறிந்த யோசேப்பு, தன்னைக் கட்டுப்படுத்தினவனாக, அவளும் கெட்டுப்போய்விடாதபடி காத்துக்கொண்டானே.  

ஆனால், தாவீதோ, ஒருநாள் சாயங்காலத்தில் தன் படுக் கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரி கையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியா யிருந்தாள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான் (2சாமு 11:2,4). பத்சேபாளின் அழகைக் கண்டதும், தாவீது தன்னைத்தான் கட்டுப்படுத்த இயலவில்லை. உரியா என்னும் கணவனுடைய வேலிக்குள் பத்சேபாளின் வாழ்க்கை இருக்கிறது என்பதை அறிந்திருந்தும், தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல், வேலியையே தாண்டிச் சென்றுவிட்டான். 

ஆனால், ஆபிரகாமின் ஊழியக்காரன், ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றபோது, நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் (ஆதி 24:14) என்று கர்த்தரிடத்தில் தான் வேண்டிக்கொண்டபடியே நடந்தபோதிலும், பெண் வீட்டிற்குச் சென்றபோது, இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றானே (ஆதி 24:49). 

தான் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடைபெற்றுவிட்டபோதிலும், திருமணமாகாத பெண்ணின் வாழ்க்கை பெற்றோரின் வேலிக்குள்ளேயே இருக்கிறது என்பதை அறிந்திருந்தவன் அவன். ஆனால், இன்றோ, இவள்தான் உன் மனைவி என்று கர்த்தர் சொப்பனத்தில்  சொன்னார் என்றும், தரிசனத்தில் காட்டினார் என்றும் பெற்றோரை விட்டுப் பிரித்து, தனியே தன்னோடு வாழும்படியாகத் தள்ளிக்கொண்டுபோய்விடும் வாலிபர்கள் எத்தனை? எத்தனை?? பெற்றோரின் அனுமதி கிடைக்காவிட்டால், வலதுபுறமாகிலும், இடதுபுறமாகிலும் புறப்பட்டுப்போக ஆயத்தமாயிராதவர்கள்? எங்கோ அகப்பட்டுக்கொண்டார்கள் என்பது நிச்சயம். அவர்கள் சர்ப்பத்தின் சதி;க்கு இரையானவர்கள்.


இழப்பு, கலப்பு, கைகலப்பு (ஆதி 33:18)

 இழப்பு, கலப்பு, கைகலப்பு



யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான். (ஆதி 33:18)


கர்த்தர் கட்டளையிடாத இடத்தில் கூடாரங்களை அமைத்து, குடியிருக்கும்படி வீட்டையும் கூடவே கட்டியெழுப்பி, தற்காலிகமான இடத்தில் நிரந்தரமாகத் தங்கவிட முயற்சித்த யாக்கோபின் வாழ்க்கையில் இழப்பு, கலப்பு, கைகலப்பு என்ற மூன்று காரியங்கள் நுழைந்துவிட்டன. சுக்கோத்திலே யாக்கோபு தங்கியிருந்தபோது, லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பர்க்கப் புறப்பட்டபோது, ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். (ஆதி 34:1,2) 

தவறான இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட யாக்கோபின் வாழ்க்கையில் இழப்பு உண்டானது. சீகேம் பட்டணத்தில் வீதிகளில் பெண்கள் நடனமாடுவது வழக்கமான ஓர் கலாச்சார நிகழ்வு. ஆண்களும், பெண்களும், பட்டணத்தின் பிற மக்களும் இத்தகைய நடனத்தினைக் காண அவ்விடத்தில் கூடி தங்கள் பொழுதைக் கழித்துவந்தனர். இத்தகைய நடன நிகழ்ச்சியினைப் பார்க்கும்படியாகவே சென்றிருந்த யாக்கோபின் மனைவிகளா கிய லேயாள், ராகேல் மற்றும் சில பெண்களுடன் யாக்கோபின் மகளாகிய தீனாளும் உடன் சென்றிருந்தாள். பெண்களின் நடனத்தைக் காணும்படியாக அங்கு வந்திருந்த  ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன், தீனாளைக் கண்டதும் அவள் மீது மோகங்கொண்டு, தீனாளை தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான் என்பது  வரலாறு.  இந்நிகழ்வு யாக்கோபுக்கு ஓர் இழப்பே. தவறான இடங்களில் நாம் தங்கியிருந்தாலோ, தேவையற்ற இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பினாலோ இத்தகைய இழப்புகளை நாமும் சந்திக்க நேரிடும்.

மேலும், ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி: இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம் (ஆதி 34:20,21) என்றார்கள். தீனாளோடு தான் கலந்துவிட்டது மாத்திரமல்ல, முழு பட்டணத்தையும் யாக்கோபின் குடும்பத்தோடு கலந்துவிட திட்டமிட்டான் சீகேம். நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல் (ஆதி 24:3) என்று தனது வேலைக்காரனிடத்தில் சொல்லியிருந்தான்  ஈசாக்கு; ஆனால், யாக்கோபின் குமாரத்தி ஒரு கானானியனோடு கலக்கும் நிலை உருவாகிவிட்டது. இந்நிகழ்வு யாக்கோபின் வாழ்க்கையில் ஓர் கலப்பே. சீகேமினுடைய வீட்டிலிருந்து, மகள் தீனாளை அழைத்துக்கொண்டுவரும்படி, யாக்கோபு தனது பன்னிரெண்டு வேலைக்காரர்களை அனுப்பியபோதும், சீகேம் அவர்களை விரட்டியடித்தான். வேலைக்காரர்களால் அங்கிருந்து தீனாளை அழைத்துவரக்கூடாததைக் கண்ட யாக்கோபு, தீனாளுக்கு உதவிசெய்யும்படியாக, இரண்டு வேலைக்காரிகளை தீனாளுடன் தங்கும்படியாக சீகேமின் வீட்டிற்கே அனுப்பிவைத்தான் என்பது வரலாறு. தவறான இடங்களில் தங்கியிருந்தால், நம்முடைய முழு சந்ததியும் சத்துருவின் சரித்திரத்தோடு கலந்துவிடக்கூடும்.

அத்துடன் நின்றுவிடவில்லை, கலப்பு, கைகலப்பாக மாறியது. யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, மனங்கொதித்து, மிகவும் கோபங்கொண்டார்கள். (ஆதி 34:7). அத்துடன், பட்டணத்திலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதம் செய்துகொண்டால், சகோதரியைத் தருகிறோம் என்று வஞ்சனையான வாக்குறுதியைக் கொடுத்து, மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக் கொண்டபோது; யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் (ஆதி 34:25,26). இந்நிகழ்வு யாக்கோபின் வாழ்க்கயில் நிகழ்ந்துவிட்டதோர் கைகலப்பே. தவறான இடத்தில் தங்கியிருந்தால், வாசனை வீசாது கெட்டுப்போய்விடும். தவறான இடத்தில் தங்கியிருந்தால், வழியிலிருப்போருக்கும் நாம் வலியை உண்டாக்கிவிடுவோம்.


பயமும், பயணமும் (ஆதி 33:17)

 பயமும், பயணமும்



யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.(ஆதி 33:17)


நாம் இருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பது உண்மையே; என்றபோதிலும், அழைத்த இடத்தைச் சென்றடைவது அதைவிட முக்கியம்.  ஏசா மற்றும் யாக்கோபு ஆகியோரின் சந்திப்பு சமாதானமாக நடைந்தபோதிலும், ஏசாவுடன் யாக்கோபு சேர்ந்து பிரயாணப்படவில்லை. என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் (ஆதி 33:14) என்று ஏசாவினிடத்தில் யாக்கோபு சொன்னபோதிலும், ஏசா தன்னைவிட்டு விலகி, வந்தவழியே சேயீருக்குப் திரும்பிப் போனபோது, சேயீரை நோக்கி யாக்கோபு பயணப்படவில்லை; மாறாக, கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டதோடு, தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தை சீகேமின் தகப்பனாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கினான் (ஆதி 33:18,19). அங்கே தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான் (ஆதி 33:17). சேயீருக்கு வருகிறேன் என்று சொல்லியும், சுக்கோத்தில் தங்கிவிட்டதற்கு, யாக்கோபின் உள்ளத்தின் ஓரத்தில் ஏசாவைக் குறித்து இருந்த பயமே காரணமாயிருந்திருக்கக்கூடும்.   

ஒருபுறம் சேயீரில் யாக்கோபின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்திருககும் ஏசா. மற்றொருபுறம். கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் (ஆதி 31:3) என்று சொல்லியே யாக்கோபை லாபானுடைய வீட்டிலிருந்து புறப்படச் செய்தததினால், தொடரவேண்டிய பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கர்;த்தர். சேயீருக்கு தன்னுடைய வீட்டிற்கு வராததினால், இந்தமுறையும் யாக்கோபு தன்னை ஏமாற்றிவிட்டதைப் போலவே ஏசா உணர்ந்திருக்கக்கூடும். அப்படியே,  தனக்கு வீட்டையும், மிருகஜீவன்களுக்குக் கொட்டாரத்தையும் போட்டதோடு மாத்திரமல்லாமல், ஆண்டவருக்கென்று அங்கே ஒரு பலிபீடத்தையும் கட்டி, அதற்கு ஏல்எல்லோக்கே இஸ்ரவேல் என்று பேரிட்டு (ஆதி. 33:20), நிரந்தரமாக அங்கே தங்கிவிட யாக்கோபு முயன்றபோது, போகவேண்டிய இடத்தை விட்டுவிட்டு வழியிலேயே யாக்கோபு தங்கிவிடுவானோ என்ற நினைவோடு, தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு (ஆதி 35:1) என்று கூறுகின்றார். 

  நாமும் சில வேளைகளில் யாக்கோபைப் போலவே செயல்பட்டுவிடுகின்றோம். போக அவசியமில்லாத இடத்திற்கு, பலவிதமான காரணங்களைச் சொல்லி, போகாமல் இருந்துவிடுகின்றோம்; ஆனால் அதே நேரத்தில், போகவேண்டிய இடத்தையும், பயணத்தையும் மறந்துவிடுகின்றோம். கர்த்தர் அழைத்த இடத்தை விட்டு விட்டு, நமக்கு வசதியான இடத்தில் வாழ்ந்துகொண்டு, கர்த்தரை திருப்திப்படுத்த விரும்புகிறோம்.

எலியாவின்  வாழ்க்கையிலும் நடந்தது இதுவே, யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னதை (1இரா 19:2) எலியா கேட்டபோது, பயம் எலியாவைச் சூழ்ந்துகொண்டது. அந்த பயத்தினாலே தொடரவேண்டிய பிரயாணமும் நின்றுபோய்விட்டது. பிராணனைக் காக்க பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனான். வனாந்திரத்திற்குச் சென்று தான் சாகவேண்டும் என்று வேண்டினான்.  நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் (1இரா 19:7) என்று தூதன் சொன்னபோதிலும், கெபிக்குள் போய் தங்கிவிட்டான். 'எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்?' (1 இராஜா 19:9) என்ற கர்த்தருடைய வார்த்தை உண்டானபோதிலும், பிராணனைக் குறித்த பயம் அவனது பயணத்தை நிறுத்திவிட்டதே. 


விரோதத்தின் வரலாறு

 விரோதத்தின் வரலாறு



சத்துருக்களாக வாழ்ந்துகொண்டிருந்த சகோதரர்களான ஏசா - யாக்கோபின் சரித்திரம் நாமறிந்ததே. எனினும், அவர்களது பயணத்தில் பொதிந்திருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களில் சிலவற்றை மேலும் தெரிந்துகொண்டால், புரிந்துகொள்வது இன்னும் சுலபமாயிருக்கும் என்ற ஒரே நோக்கத்துடனேயே வேதத்திலுள்ள அவர்களது சரித்திரத்தை யாசேர் புத்தகத்தோடு இணைத்து எழுதியுள்ளேன். சமாதானம் செய்துகொள்ளாமல் சமாதிவரை சென்ற ஏசாவின் விரோதம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றும் குடும்பங்களிலும் காணப்பட்டுவிடக்கூடாது.

சேம், காம், யாப்பேத் என்பவர்கள் நோவாவின் குமாரர்கள் (ஆதி. 5:32). காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள் (ஆதி 10:6); கானானுடைய குமாரனான ஈவியின் (ஆதி. 10:17) மகன் கூரின் புத்திரனான சேயீர் தான் கட்டின பட்டணத்திற்கு சேயீர் என்று பெயரிட்டு குடும்பத்தோடு அங்கே வசித்துவந்தான். 

சேயீர் ஏதோம் நாட்டிலே காணப்பட்ட ஓர் பகுதி (ஆதி. 32:3). அங்கிருந்த காடுகளில் வேட்டைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ஏசா (யாசேர் 27:1). யாக்கோபோ, தாத்தாவாகிய ஆபிரகாமினிடத்தில் ஆண்டவருடைய வழிகளைக் கற்றுக்கொள்வதிலேயே விருப்பமாயிருந்தவன் (யாசேர் 26:28). ஆபிரகாம் 175 வயதாயிருக்கும் போது தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்; அப்போது யாக்கோ பின் வயது 15 மாத்திரமே (யாசேர் 262:9). அந்நாட்களிலே, ஈசாக்கு தனது இரண்டு குமாரர்களையும், ஏபேருக்குத் தகப்பனும், நோவாவின்  மகனுமான சேமினிடத்திற்கு கர்த்தருடைய வழிகளைக் கற்றுக்கொள்ளும் படியாக அனுப்பியபோது. யாக்கோபு விருப்பத்துடன் புறப்பட்டுச் சென்றான்; 32 ஆண்டுகள் சேமின் வீட்டிலே தங்கியிருந்து கர்த்தருடைய வழிகளைக் கற்றறிந்தான். ஆனால், ஏசாவோ ஈசாக்கின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். காட்டிற்குச் சென்று வேட்டையாடுவதிலேயே தன் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான் ஏசா. ஒருமுறை, சேயீருக்குச் சென்ற ஏசா ஒரு வருடம் நான்கு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து வேட்டையாடிக்கொண்டிருந்தான். (யாசேர் 28:21)

கர்த்தருடைய கட்டளைகளைக் கற்றுக்கொள்ள சேமின் வீட்டிற்கு ஏசா செல்லாதிருந்தபோதிலும், ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்த தினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள் (ஆதி 25:28). இன்றும் வேதத்தை வெறுக்கும் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் மட்டும் சந்தோஷமாகிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் உண்டு. ஈசாக்கு 110 வயதாயிருக்கும்போது, சேம் மரணமடைந்ததற்குப் பின்னரே, யாக்கோபு தனது 50 -வது வயதில் கானானிலிருக்கும் தன் தகப்பனுடைய வீட்டிற்கு வந்தான். (யாசேர் 28:24) 

ஓருமுறை சேயீருக்கு வேட்டைக்குச் சென்று வேட்டையாடினபோது, பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத் (ஆதி. 10:9) உடன் உண்டான பகையினிமித்தம், நிம்ரோத்தை அம்பெய்து, வெட்டிக் கொன்றான் ஏசா (யாசேர் 27:7). ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு இதுவே. (ஆதி 25:29); கூழுக்காக ஏசா தனது சேஷ்ட புத்திர பாகத்தை யாக்கோபுக்கு சகோதரனாகிய யாக்கோபுக்கு எழுதிக்கொடுத்தான்.

ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினு டைய குமாரத்தியாகிய யூதீத்தை விவாகம்பண்ணினான் (ஆதி 26:34; யாசேர் 28:22); இவள் சேயீரில் வாழ்ந்துகொண்டிருந்த ஓர் கானானிய ஸ்திரீ. கர்த்தருக்கடுத்த காரியங்களைக் கற்றுக்கொள்ளும்படியாக ஏசா செல்லாதிருந்தும், வாய்க்கு ருசியாக வேட்டையாடித் தந்துகொண்டிருந்த ஏசாவை ஆசீர்வதிக்கவே ஆசைகொண்டான் ஈசாக்கு. ஈசாக்கின் இந்த தவறான முடிவு, ரெபேக்காளினால் தடம் மாறியது. தகப்பனது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, தாயினால் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான் யாக்கோபு. தகப்பனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டபின், சகோதரனான ஏசாவுக்குப் பயந்து, சேமின் குமாரனாகிய ஏபேரின் வீட்டில் 14 வருடங்கள் தங்கியிருந்தான் யாக்கோபு; அங்கு இருந்த நாட்களில், சேமின் குமாரனாகிய ஏபேரினிடத்தில் மீண்டும் கர்த்தருடைய கட்டளைகளையே கற்றுவந்தான் (யாசேர். 29:11). ஏசாவோ, யாக்கோபின் மேலும், பெற்றோரின் மேலும் கோபமூண்டவனாக மீண்டும் எழுந்து சேயீருக்குச் சென்றான்; அப்போது ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தை விவாகம்பண்ணினான் (ஆதி. 26:34). தகப்பனையும், தாயையும் விட்டுப் பிரிந்து சேயீரிலேயே வாழ்ந்துகொண்டிருந்த ஏசா, ஆறு மாதங்களுக்குப் பின் தனது இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் கானானிலுள்ள தன் தகப்பன் வீட்டிற்குத் திரும்பினான் (யாசேர் 29:13). ஏசாவின் மனைவிகள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதி 26:35); அவர்கள் அந்நிய தெங்வங்களை வணங்கு கிறவர்களாகவே காணப்பட்டார்கள்; கர்த்தருடைய வழியை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஏசாவின் மணவாழ்க்கை, குடும்பத்திற்கு மனமடிவையே கொண்டுவந்தது. இன்றைய நாட்களிலும், கர்த்தருக்கடுத்த காரியங்களில் பிள்ளைகள் போதிக்கப்படாவிட்டால், வேதத்தின் கற்பனைகளை பிள்ளைகள் அறிந்திராவிட்டால், தேவனை அறியாத அந்நிய நுகத்திலேயே அவர்கள் தங்கள் மணவாழ்க்கையை இணைத்துவிடுவார்கள் என்பது நிச்சயம். கர்த்தரை அறியாத பெண்ணை ஏசா மனைவியாக ஏற்றுக்கொண்டதற்கு, அவன் கர்த்தரை அறிந்திராததே காரணம். 

ஏபேரில் வீட்டில் தங்கியிருந்த 14-ம் வருட முடிவிலே,   தகப்பனையும் தாயையும் காணும்படியாகப் புறப்பட்டான் யாக்கோபு (யாசேர் 29:20). எனினும் ஏசாவின் கோபம் இன்னும்     தணியாதிருந்ததினால், தகப்பனாலும் மற்றும் தாயினால் எச்சரிக் கப்பட்டு, ஆரானுக்கு லாபானிடத்திற்குச் செல்லும்படியாக அனுப் பப்பட்டான். வெள்ளி, பொன் மற்றும் அநேக வெகுமதிகளைக் கொடுத்து மகன் யாக்கோபை வழியனுப்பினர் பெற்றோர். பெயர்செபாவிலிருந்து யாக்கோபு புறப்பட்டபோது 77 வயதாயிருந்தான். 

யாக்கோபு லாபானுடைய வீட்டிற்குச் சென்ற ஐந்தாம் வருடத்தில், ஏசாவின் மனைவி யூதீத் மரணமடைந்தாள் (யாசேர் 30:21). யூதீத்தின் மரணத்திற்குப் பின், சேயீருக்குச் சென்ற ஏசா, நீண்ட நாட்களாக அங்கேயே தங்கியிருந்தான். ஆதாள், அகோலிபாமாள் என்னும் ஸ்திரீகளையும் ஏசா விவாகம்பண்ணினான். யாக்கோபு லாபானுடைய வீட்டிற்குச் சென்ற ஆறாம் வருடத்தில், ஏசா மீண்டும் கானானுக்குத் திரும்பிவந்தான். ஏசாவின் மந்தையோ மிகவும் திரளாயிருந்தது; பூமி அவைகளைத் தாங்கக்கூடாதிருந்தது. ஏசாவின் மந்தை மேய்ப்பருக்கும், கானானியர்களின் மேய்ப்பாகளுக்கும் வாக்குவாதம் உண்டானது (யாசேர் 30:26). இதைக் கண்ட ஏசா, கானானை விட்டு விலகி, மீண்டும் சேயீருக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தான். அவ்வப்போது வந்து பெற்றோர்களைச் சந்திப்பதை மாத்திரம் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

யாக்கோபின் மீதிருந்த பகையோ மறையவில்லை. யாக்கோபு வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டதை அறிந்த ஏசா, யாக்கோபை கொலைசெய்யும்படியாகவும், யாக்கோபு கொண்டுசென்ற பொருட்களைத் திருப்பிக்கொண்டுவரும்படியாகவும் தன்னுடைய மகன் எலிப்பாசை அனுப்பினான் (யாசேர் 29:31); எலிப்பாஸ் அப்போது 13 வயதானவனே. பகையுணர்வைச் சுமந்துகொண்டிருக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளையும் பழிவாங்கத் தூண்டிவிடுவது நிச்சயம் என்பது ஏசாவின் வாழ்க்கையில் நிரூபணமாகிறதே.. உடமைகளை எடுத்துக்கொண்டு, உயிரோடு தன்னை விட்டுவிடும்படி யாக்கோபு எலிப்பாசை வேண்டிக்கொண்டதன்படி, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு யாக்கோபை வெறுங்கையாக அனுப்பிவிட்டான் எலிப்பாஸ் (யாசேர் 29:38); எனினும், ஆண்டவரோ பரிவாரங்களோடு யாக்கோபை புறப்பட்டுவரச் செய்தார். (ஆதி. 32:10)

தகப்பனாகிய ஈசாக்கை அடக்கம்பண்ண இணைந்துவந்தது உண்மைதான் (ஆதி. 35:29); என்றாலும் யாக்கோபை அந்த குகை யிலே அடக்கம் செய்ய ஏசா சம்மதிக்கவில்லையே. எகிப்திற்கு சென்ற யாக்கோபு அங்கே மரணமடைந்தபோது, யோசேப்பு எகிப்திலே உயர் பதவியிலே அமர்ந்திருந்தான். பார்வோனுடைய அனுமதியின்படி தன் தகப்பனா யாக்கோபின் சரீரத்தை, யாக்கோபின் விருப்பப்படி, கானான் தேசத்தில் புதைக்கும்படியாகப் புறப்பட்டுச் சென்றான். எகிப்தின் மக்களும், உயர்அதிகாரிகளும், திரளான ஜனங்களும் யோசேப்போடுகூட சென்றனர். சகோதரனாகிய யாக்கோபு மரணமடைந்ததை அறிந்த ஏசா, சேயீரிலிருந்து புறப்பட்டுவந்து தன் சகோதரனுக்காக புலம்பி அழுதான்; என்றாலும், ஏசாவின் அழுகை வெளிப்படையானதாகவே காணப்பட்டது. எபிரோனிலே ஈசாக்கு புதைக்கப்பட்ட குகையிலே யாக்கோபை புதைப்பதற்கோ ஏசா எதிர்த்து நின்றான். அது தனக்கே சொந்தமானது என்று வாதிட்டான். சேஷ்டபுத்திர பாகத்தை விற்றபோது, யாக்கோபினிடத்தில் தான் அதை விற்றுப்போட்டதை, யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தான் ஏசா. என்றபோதிலும், ஏசா தன் சகோதரனான யாக்கோபுக்கு எழுதிக்கொடுத்த தஸ்தாவேஜுக்கள் அனைத்தையும், யாக்கோபு யோசேப்பினிடத்தில் கொடுத்திருந்ததையோ ஏசா அறியாதிருந்தான். யாக்கோபு தன்னிடத்தில் கொடுத்த தஸ்தாவேஜுக்கள் அனைத்தும், எகிப்தில் இருக்கிறது என்றும், அவைகளை எடுத்துவரும்படியாக சகோதரனாகிய நப்தலியையும் யோசேப்பு அனுப்பியபோது, கலக்கமடைந்த ஏசா, யுத்தத்திற்கு ஆயத்தமானான். யாக்கோபின் குமாரனான தானின் புத்திரன் கூஷிம், காதுகேளாதவனாயிருந்தபோதிலும், அருகி லிருந்தவர்கள் மூலம் ஏசாவின் எதிர்ப்பை அறிந்துகொண்டபோது, எதிர்த்து சென்று பட்டயத்தால் ஏசாவை கொன்று  போட்டான். பட்டயத்தை எடுத்த ஏசாவின் வாழ்க்கை பட்டயத்தாலேயே முடிவுக்கு வந்தது (யாசேர் 56 அதி.). 

பகையை மனதிலே வைத்திருந்தவனுக்கு, பட்டயமே பதிலானது.